நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. வரைவு தேர்தல் அறிக்கை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது
நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. வரைவு தேர்தல் அறிக்கை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. வரைவு தேர்தல் அறிக்கை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
தயாரிப்புக்குழு
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. எந்த தேர்தலை சந்திப்பதாக இருந்தாலும் ஒரு கட்சிக்கு முக்கிய அச்சாணியாக திகழ்வது தேர்தல் அறிக்கை தான்.
அதன்படி, இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொன்னையன் தலைமையில் குழு ஒன்று கடந்த ஜனவரி கடைசி வாரத்தில் அமைக்கப்பட்டது. இந்த குழுவில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், அமைப்பு செயலாளர்கள் நத்தம் விசுவநாதன், செ.செம்மலை, பி.எச்.மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி. ரபி பெர்னார்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
வரைவு தேர்தல் அறிக்கை
இந்த குழுவினர், தங்களது தேர்தல் அறிக்கை தாயரிக்கும் பணியை நேற்று முன்தினம் நிறைவு செய்து, தாங்கள் தயாரித்த வரைவு தேர்தல் அறிக்கையை கட்சி தலைமையிடம் வழங்குவதற்கு தயாராக இருந்தனர். இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மகளிர்தின கொண்டாட்டத்துக்காக நேற்று வருகை தந்தனர்.
அப்போது, பொன்னையன் தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் தாங்கள் தயாரித்த வரைவு தேர்தல் அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் வழங்கினர். 130 பக்கங்கள் கொண்ட இந்த வரைவு தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளும், பெண்கள் மற்றும் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களும் இடம்பெற்றுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வரைவு தேர்தல் அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முழுமையாக படித்து பார்த்த பின்னர், அதில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது இருந்தால், அந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story