தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அலைவீசுகிறது வைகோ சொல்கிறார்


தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அலைவீசுகிறது வைகோ சொல்கிறார்
x
தினத்தந்தி 8 March 2019 9:00 PM GMT (Updated: 2019-03-09T01:27:04+05:30)

ம.தி.மு.க. மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தினவிழா நேற்று திருச்சியில் நடந்தது. மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர் ரொஹையா தலைமை தாங்கினார்.

திருச்சி, 

ம.தி.மு.க. மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தினவிழா நேற்று திருச்சியில் நடந்தது. மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர் ரொஹையா தலைமை தாங்கினார். இந்த விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தின் வளமான காவிரி பாசன பகுதியை அழிக்கவேண்டும் என்பதற்காக மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு திட்டம் வகுத்து கொடுத்தவர் மோடி. மேகதாதுவில் அணை கட்டி முடிக்கப்பட்டால் தமிழகம் எத்தியோப்பியா போல் பஞ்ச பிரதேசமாக மாறிவிடும்.

பெரியார், காமராஜரால் கொண்டு வரப்பட்ட சமூக நீதி கொள்கைக்கு மோடி கொள்ளிவைக்கிறார். பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தின் எதிர்காலம் அழிந்துவிடும். அதனை முறியடிப்பதற்கான பிரசாரத்தை நான் தொடங்கிவிட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த வைகோ கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். இதனுடன் சேர்த்து 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அதிலும் வெற்றி பெறுவோம். ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகம், பணபலம் இவற்றுக்கு எல்லாம் எதிராக தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அலைவீசுகிறது.

துரைமுருகன் வீட்டை தே.மு.தி.க.வினர் முற்றுகையிட்டு இருப்பது விபரீதத்தை ஏற்படுத்திவிடும். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறினார்.

Next Story