துரைமுருகன் வீட்டை முற்றுகையிட தே.மு.தி.க.வினர் முயற்சி எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினரும் திரண்டதால் பரபரப்பு
காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனை கண்டித்து அவருடைய வீட்டை தே.மு.தி.க. வினர் முற்றுகையிட முயன்றனர். போலீசார் தடுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர்,
காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனை கண்டித்து அவருடைய வீட்டை தே.மு.தி.க. வினர் முற்றுகையிட முயன்றனர். போலீசார் தடுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்து மோதல்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், தே.மு.தி.க. துணைசெயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் காரசாரமாக மோதிக்கொண்டனர். தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டணி சம்பந்தமாக சந்தித்து பேசினர்.
ஆனால் தி.மு.க.வில் சீட்டு இல்லையென கூறியதாக துரைமுருகன் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த சுதீஷ், துரைமுருகனை தே.மு.தி.க. நிர்வாகிகள் தனிப்பட்ட காரணங்களுக்காக சந்தித்தனர். கூட்டணி குறித்து பேசவில்லை. மேலும் துரைமுருகன் அவரது கட்சி குறித்தும், தலைமை குறித்தும் என்னிடம் கூறியதை நான் அரசியல் நாகரிகம் கருதி வெளியே சொல்லவில்லை என்றார்.
இதற்கு பதிலடியாக துரைமுருகன் அளித்த பேட்டியில் நானும் சுதீசும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர் மீது நான் வைத்திருந்த மரியாதைக்கு அவரே குந்தகம் ஏற்படுத்துகிறார். தே.மு.தி.க.வினர் நொந்து போயிருக்கிறார்கள். மேலும் கருத்துக்கூறி அவர் களை புண்படுத்த விரும்பவில்லை என்றார். இதனால் துரைமுருகன் மீது தே.மு.தி.க. வினர் கோபமடைந்தனர்.
சாலைமறியல்
இந்த நிலையில் காட்பாடியில் துரைமுருகன் வீடு அமைந்துள்ள ஓடைபிள்ளையார் கோவில் அருகே தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று திரண்டனர். அவர்கள் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் கோபமடைந்த தே.மு.தி.க. நிர்வாகிகள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த தி.மு.க. நிர்வாகிகள் சிலரும் திரண்டு வந்து, தே.மு.தி.க.வினருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் இரு கட்சியினரிடயே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. மேலும் துரைமுருகன் வீட்டின் முன்பும் தி.மு.க.வினர் திரண்டிருந்தனர்.
பரபரப்பு
அதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தே.மு.தி.க. வினர் 42 பேரை, போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
துரைமுருகனை கண்டித்து தே.மு.தி.க.வினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதாலும், தி.மு.க.வினர் திரண்டு வந்ததாலும் காட்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story