சட்டம், விதிகள் மீறல்: சினிமா தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ்
சட்டம், விதிகளை மீறியதால் விளக்கம் அளிக்கக்கோரி தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.
சென்னை,
சட்டம், விதிகளை மீறியதால் விளக்கம் அளிக்கக்கோரி தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இதுகுறித்து தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் கா.பாலசந்திரன் அனுப்பிய விளக்க நோட்டீசில் கூறியிருப்பதாவது:-
அரசு ஆய்வு
தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் மீது சமீபத்தில் பல்வேறு புகார்கள் வந்துள்ளன. ஆர்.ராதாகிருஷ்ணன் அளித்த புகார் அடிப்படையில் அரசு ஆய்வுகளை மேற்கொண்டது. மாவட்ட பதிவாளர், பதிவுத்துறை தலைவர் ஆகியோரின் அறிக்கை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடந்தது.
தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் சில குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அரசு உணர்ந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
பதிவுச்சட்டம் மீறல்
2017-ம் ஆண்டில் இருந்து இந்த சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டப்படவில்லை. ஆவணங்களில் பதிவாளரின் ஒப்புதலை பெறாமல் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டத்தின் 16(3), 26 ஆகிய பிரிவுகளை மீறியுள்ளர்கள். சங்கத்தின் அனைத்து புத்தகங்கள், ஆவணங்கள் ஆகியவை சென்னை தியாகராயநகர் அலுவலகத்தில்தான் பராமரிக்கப்படுகின்றன. பதிவு செய்யப்பட்டுள்ள அந்த அலுவலகத்தின் சூழ்நிலை மாற்றம் பற்றிய தகவல்களை சங்கம் பதிவு செய்யவில்லை.
சங்கத்தின் குறிப்பு கோப்புகளை செயற்குழுவின் ஒப்புதலை பெறவில்லை. தியாகராயநகரில் தனி அலுவலகம் எடுக்கப்பட்டு, அதற்கு முன்பணம் என்ற பெயரில் ரூ.16 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டில் இருந்து வாடகையாக மாதம் ரூ.2 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. புகார்தாரர் கூறியதுபோல இது ஒருமித்த முடிவு கிடையாது. தேவையான ஆவணங் களை பதிவு அலுவலகத்தில் வைத்துக்கொள்ளவில்லை. முகவரி மாற்றத்துக்கான விண்ணப்பத்தை இதுவரை பதிவாளரிடம் அளிக்காமல் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டத்தின் 29(3), 13 ஆகிய பிரிவுகளை மீறியுள்ளர்கள்.
சிறப்பு அதிகாரி நியமனம்
சங்க உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம், பரிசுத்தொகை, மகன், மகள் திருமண உதவித்தொகை, குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, தீபாவளி பரிசுத்தொகை என்ற வகைகளில் சங்க நிதியை பகிர்ந்துள்ளர்கள். அது, சங்கத்தின் துணை விதிகளுக்கும் சட்டங்களுக்கும் முரணாக காணப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டத்தின் 25-ம் பிரிவு மீறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டப்படி உங்களுக்கு விளக்கம் அளிக்க ஒரு வாய்ப்பு தரப்படுகிறது. எனவே, சிறப்பு அதிகாரியை அரசே நியமித்து உங்கள் சங்கத்தின் மேலாண்மை விவகாரங்களை ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்கு இன்னும் 30 நாட்களுக்குள் நீங்கள் விளக்கம் அளிக்க வேண் டும். இல்லாவிட்டால், சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு சங்கத்தின் மேலாண்மை அதிகாரம் எடுத்துக்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story