தமிழகத்தில் நடந்த லோக் அதாலத் மூலம் 68 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு சமரச தொகையாக ரூ.274 கோடி வழங்க உத்தரவு


தமிழகத்தில் நடந்த லோக் அதாலத் மூலம் 68 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு சமரச தொகையாக ரூ.274 கோடி வழங்க உத்தரவு
x
தினத்தந்தி 10 March 2019 3:00 AM IST (Updated: 10 March 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நடந்த லோக் அதாலத் மூலம் 68 ஆயிரத்து 347 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதில் சமரச தொகையாக ரூ.274 கோடி வழங்க உத்தரவிடப்பட்டதாகவும் சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் நீதிபதி ஏ.நஷீர் அகமது கூறினார்.

சென்னை, 

தமிழகத்தில் நடந்த லோக் அதாலத் மூலம் 68 ஆயிரத்து 347 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதில் சமரச தொகையாக ரூ.274 கோடி வழங்க உத்தரவிடப்பட்டதாகவும் சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் நீதிபதி ஏ.நஷீர் அகமது கூறினார்.

மக்கள் நீதிமன்றம்

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை, இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் சம்மதத்துடன் சுமுக தீர்வை எட்ட 3 மாதங்களுக்கு ஒருமுறை தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றத்தை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று லோக் அதாலத் நடந்தது. இதில் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் இருதரப்பு சமரசத்துடன் நேற்று முடிவுக்கு வந்தது. இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் நீதிபதி ஏ.நஷீர்அகமது கூறியதாவது:-

தேசிய லோக் அதாலத் நிகழ்ச்சியில் செக்மோசடி, கடன் வசூலிப்பு, வங்கி, மின்சாரம், போக்குவரத்துத்துறை சம்பந்தமான வழக்குகள் என்று 17 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

ரூ.247 கோடி

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.வைத்திய நாதன், ஆர்.மகாதேவன், ஆர்.சுப்பிரமணியன், சி.வி. கார்த்திகேயன், எம்.தண்டபாணி, பி.ராஜமாணிக்கம், எம்.நிர்மல்குமார், சுப்பிரமணியம் பிரசாத், ஜி.கே.இளந்திரையன், சி.சரவணன் ஆகியோர் தலைமையில் 10 அமர்வுகளும், மதுரை ஐகோர்ட்டு கிளையில் நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், நிஷா பானு, பி.பொங்கியப்பன், ஓய்வுப்பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள் ஏ.ஆர். ராமலிங்கம், கே.கருப்பையா, ஆர்.கோகுல்தாஸ் ஆகியோர் தலைமையில் 6 அமர்வுகளும், இதுதவிர மாவட்ட நீதிபதிகள் தலைமையில் தனித்தனி அமர்வுகள் என மொத்தம் 509 அமர்வுகளில் சுமார் 2.30 லட்சம் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதில் 68 ஆயிரத்து 347 வழக்குகள் முடிவுக்கு வந்தன. இதில் சமரச தொகையாக ரூ.274 கோடியே 12 லட்சத்து ஆயிரத்து 69 வழங்க உத்தரவிடப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

73 வயது முதியவர்

சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் அர்ஜூன் (வயது 73) இந்த லோக் அதாலத் மூலம் நீண்ட கால வழக்கு ஒன்றில் தீர்வை எட்டினார். இவர், பணிக்கு சரியாக வராததால் கடந்த 1996-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அர்ஜூன் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் அர்ஜூனுக்கு ரூ.6 லட்சத்து 89 ஆயிரம் மற்றும் ஓய்வூதிய பணப்பலன்களைத் தருமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில், நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. முடிவில், பணப்பலனாக சுமார் ரூ.5 லட்சத்தை 2 மாதங்களுக்குள் தருவதாக போக்குவரத்துக் கழகம் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து வழக்கு முடிவுக்கு வந்தது.

Next Story