‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டு சிறை நடிகர் மனோபாலா மூலம் போலீசார் விழிப்புணர்வு


‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டு சிறை நடிகர் மனோபாலா மூலம் போலீசார் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 10 March 2019 3:30 AM IST (Updated: 10 March 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நடிகர் மனோபாலா மூலம் போலீசார் விழிப்புணர்வு மேற்கொண்டுள்ளனர்.

சென்னை, 

‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நடிகர் மனோபாலா மூலம் போலீசார் விழிப்புணர்வு மேற்கொண்டுள்ளனர்.

குறும்படங்கள் வெளியீடு

போக்குவரத்து விதிமுறைகள், ‘சைபர் கிரைம்’ மற்றும் வங்கி மோசடி ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைப்படத்துறையினர் உதவியுடன் சென்னை போலீசார் 3 குறும்படங்கள் தயாரித்தனர்.

இந்த குறும்படங்கள் வெளியீட்டு விழா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூடுதல் கமிஷனர்கள் மகேஷ்குமார் அகர்வால், தினகரன், அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த குறும்படத்தில் நடித்த திரைப்பட நடிகர் மனோபாலா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் அன்பு, இணை கமிஷனர்கள் வி.விஜயகுமார் (மேற்கு), ஜெயகவுரி(கிழக்கு), சுதாகர்(போக்குவரத்து ) உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் திருநாவுக்கரசர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கமிஷனர் வேண்டுகோள்

நிகழ்ச்சியில் 3 குறும்படங் களை வெளியிட்டு, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:-

போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் என்பதை மக்கள் கடமையாக கொள்ள வேண்டும். இதற்கு இந்த குறும்படம் உதவியாக அமையும். நவீன உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மோசடிகளும் நடக்கின்றன. தினமும் 30 புகார்கள் வருகின்றன.

2018-ம் ஆண்டு மட்டும் ‘சைபர் க்ரைம்’ பிரிவில் 3 ஆயிரத்து 632 புகார்களும், வங்கி மோசடி பிரிவில் 4 ஆயிரத்து 646 புகார்களும், வேலைவாய்ப்பு மோசடி பிரிவில் 514 புகார்களும் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் பேசும்போது, ‘ 2018-ம் ஆண்டில் சென்னையில் சாலைவிபத்தில் 1,297 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 792 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள்.

போக்குவரத்து விதிமீறல் கள் தொடர்பாக 24 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.27 கோடி அபராத தொகையாக வசூலிக்கப்பட்டது. இதில் 4 லட்சத்து 67 ஆயிரம் ‘ஹெல்மெட்’ வழக்குகள் ஆகும்.’ என்றார்.

3 ஆண்டு சிறைதண்டனை

குறும்படத்தில் நடிகர் மனோ பாலா பேசும் வசனங்கள் வருமாறு:-

‘வாட்ஸ்-அப்’பில் வரும் எந்த தகவலையும் ஆராயாமல் உடனுக்குடன் பரிமாற கூடாது. ஒரு மதத்தை தவறாக விமர்சிக்கும் வீடியோ, சாதிக்கலவரத்தை தூண்டுகிற ஆடியோ, பெண்ணை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ, வேலைவாய்ப்பு பற்றிய தவறான தகவல்களையோ அனுப்பினால் 3 ஆண்டு சிறை தண்டனை உங்களுக்காக காத்திருக்கிறது.

குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் தனிப்பட்ட புகைப்படத்தையும், விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடக் கூடாது.

Next Story