மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு தர்ம அடி ‘போக்சோ’ சட்டத்தில் கைது


மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு தர்ம அடி ‘போக்சோ’ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 9 March 2019 9:45 PM GMT (Updated: 2019-03-10T02:02:12+05:30)

பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். ‘போக்சோ’ சட்டத்தில் அந்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், 

பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். ‘போக்சோ’ சட்டத்தில் அந்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

சிறப்பு வகுப்புகள்

விழுப்புரம் அருகே உள்ளது சிறுமதுரை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 14-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் மாணவ- மாணவிகளுக்கு கடந்த சில வாரங்களாக மாலையில் பள்ளி முடிந்ததும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்ததும் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஆங்கில பாடத்திற்கான சிறப்பு வகுப்புகள் நடந்தது. இந்த வகுப்பை திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சரவணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆங்கில ஆசிரியரான கிருஷ்ணன் (வயது 32) நடத்தினார். இந்த சிறப்பு வகுப்பு முடிந்ததும் மாணவ- மாணவிகள் அனைவரும் பள்ளியில் இருந்து வீட்டிற்கு புறப்பட தயாராகினர். அப்போது ஆசிரியர் கிருஷ்ணன், மாணவி ஒருவரிடம் பேப்பர்களை அடுக்க வேண்டும் என்று கூறி அங்குள்ள ஒரு அறைக்கு வரும்படி அழைத்தார்.

சில்மிஷம்

உடனே அந்த மாணவியும் தயக்கத்துடனே அந்த அறைக்கு சென்றார். அங்கு திடீரென மாணவியை ஆசிரியர் கிருஷ்ணன் கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, இதுபோன்று நடந்து கொள்ளாதீர்கள் என்று ஆசிரியரிடம் ஆவேசமாக கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்தார்.

இதை பார்த்த சக மாணவ- மாணவிகள், அந்த மாணவியிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், நடந்த சம்பவம் குறித்து சக மாணவ- மாணவிகளிடம் கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி பொதுமக்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆசிரியருக்கு தர்மஅடி

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் அப்பள்ளிக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து, மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கிருஷ்ணனை வகுப்பறைக்குள் சிறை வைத்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் பள்ளியின் முன்பு திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார், அந்த பள்ளிக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியரை விடுவிக்க முடியாது, அவருக்கு தாங்களே தண்டனை கொடுப்போம் என்று தெரிவித்தனர்.

‘போக்சோ’ சட்டத்தில் கைது

இதனை தொடர்ந்து கிராம முக்கியஸ்தர்கள் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். அப்போது ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர், திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் ஆசிரியர் கிருஷ்ணன் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, விழுப்புரம் மத்திய சிறையில் அடைத்தனர். கைதான கிருஷ்ணனுக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Next Story