அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் இன்று கூட்டணி உடன்பாடு ஏற்பட வாய்ப்பு


அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் இன்று கூட்டணி உடன்பாடு ஏற்பட வாய்ப்பு
x
தினத்தந்தி 10 March 2019 4:30 AM IST (Updated: 10 March 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டணி உடன்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னை, 

அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டணி உடன்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க. அதிருப்தி

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. தே.மு.தி.க. மற்றும் த.மா.கா.வை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்பத்தில் இருந்தே தே.மு.தி.க. போக்குகாட்டி வருவதால் த.மா.கா. காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் இணைய முதலில் 12 தொகுதிகளை கேட்டு வந்த தே.மு.தி.க. பிறகு 7 தொகுதிகளுக்கு இறங்கி வந்தது. அதேநேரத்தில், எதிர்க்கட்சியான தி.மு.க.விடமும் கூட்டணி பேச்சுவார்த்தையை தே.மு.தி.க. நடத்தியதால், அ.தி.மு.க. தரப்பில் அதிருப்தி ஏற்பட்டது.

பிரேமலதா விமர்சனம்

இந்தநிலையில், கூட்டணி கதவை மூடி, தி.மு.க.வும் கையை விரித்து விட்டதால், தே.மு.தி.க.வுக்கு அ.தி.மு.க.வே கதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், கடைசி கட்ட முயற்சியாக தே.மு.தி.க. பல்வேறு வித்தைகளை காட்டியது. தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தி.மு.க.வை வசைபாடிய நிலையில், இடையிடையே அ.தி.மு.க.வையும் வம்புக்கு இழுத்தார். தே.மு.தி.க.வால் தான் ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார் என்றும், அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேரால் தமிழகத்துக்கு என்ன நன்மையும் கிடைக்கவில்லை என்றும் தடாலடியாக கூறினார்.

இதனால், அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே விரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அ.தி.மு.க. கூட்டணியிலும் தே.மு.தி.க.வுக்கு இடமில்லாமல் போகுமோ? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ‘அரசியலில் இதுவெல்லாம் சாதாரணமப்பா...’ என்பதைப் போல், அ.தி.மு.க.வும் பிரேமலதா விஜயகாந்த் விமர்சனத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கூட்டணி உடன்பாடு ஏற்பட வாய்ப்பு

தற்போது, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. தே.மு.தி.க.வுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 தொகுதிகள் உறுதியானதாகவும் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நேற்று இரவு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இதனால், அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டணி உடன்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைய வேண்டும் என்று அதிகமாக ஆர்வம் காட்டியது பா.ஜ.க. தான். எனவே, பா.ஜ.க.வும் மராட்டிய மாநிலத்தில் இருந்து ஒரு ராஜ்ய சபா ‘சீட்’டை தே.மு.தி.க.வுக்கு வழங்கும் என்று தெரிகிறது.

Next Story