பா.ஜ.க. அரசு மீது பொய் பிரசாரம்: சமூக வலைதளத்தில் பதிலடி கொடுங்கள் நிர்மலா சீதாராமன் பேச்சு


பா.ஜ.க. அரசு மீது பொய் பிரசாரம்: சமூக வலைதளத்தில் பதிலடி கொடுங்கள் நிர்மலா சீதாராமன் பேச்சு
x
தினத்தந்தி 11 March 2019 3:00 AM IST (Updated: 11 March 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. அரசு மீதான பொய் பிரசாரங்களுக்கு சமூக வலைதளத்தில் பதிலடி கொடுங்கள் என நிர்மலா சீதாராமன் பேசினார்.

சென்னை, 

பா.ஜ.க. அரசு மீதான பொய் பிரசாரங்களுக்கு சமூக வலைதளத்தில் பதிலடி கொடுங்கள் என நிர்மலா சீதாராமன் பேசினார்.

சமூக வலைதளம்

சமூக வலைதளங்கள் மூலமாக மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ள தமிழக பா.ஜ.க., ‘தமிழ்நாடு நமோ வாரியர்ஸ்’ சமூக ஊடகத்திற்கான ஒருங்கிணைப்பு கூட்டத்தை சென்னையில் நேற்று நடத்தியது. தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

பதிலடி

சமூக வலைதளங்களில் சிலர் பா.ஜ.க. அரசு மீது பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். இந்த பொய் பிரசாரங்களுக்கு ஒரு மணிநேரத்தில் ஆதாரப்பூர்வமாக நாம் பதிலடி கொடுக்க வேண்டும்.

ராணுவத்துக்கு கடந்த 10 ஆண்டுகளாக முந்தைய காங்கிரஸ் அரசு கருவிகளை வாங்கவில்லை. மோடி அரசின் நடவடிக்கையால் நாடு பாதுகாப்பாக இருக்கிறது. பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாமை தாக்கிய நம்மை கண்டு அந்த நாடு அச்சத்தில் இருக்கிறது. மீண்டும் மோடி ஆட்சி மலர வாக்காளர்களிடம் சென்று நம்முடைய செயல்பாடுகளை எடுத்து சொல்லுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

முதலீடு

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 19.5 சதவீத வாக்குகளை பெற்றது. இதில் நாம் ஒரு இடம் பெற்றதற்கே தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை மத்திய அரசு அளித்தது. 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றால், எவ்வளவு முதலீடுகள் கிடைக்கும் என்று எண்ணி பாருங்கள்.

சமூக வலைதளத்தில், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை நாம் கொண்டு வந்தாக தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இந்த திட்டங்களை மத்திய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. மு.க.ஸ்டாலின் தான் அந்த திட்டத்திற்கு கையெழுத்திட்டார். இதுபோன்ற சவால் களை நாம் எதிர்கொள்ள சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டும்.

வளர்ச்சி திட்டம்

காமராஜரை தோற்கடித்தது தி.மு.க. தான். எனவே காமராஜரை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தான் தகுதியில்லை. காமராஜர் மறைவுக்கு பிறகு இப்போது தான் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைக் கிறது.

இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்தது தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி. ஆனால் தூக்கு மேடை வரை சென்ற மீனவர்களை காப்பாற்றி அழைத்து வந்தது பா.ஜ.க. அரசு. மீனவர்கள் சுடப்படுவதை தடுத்து நிறுத்தினோம். சமூக வலைதளத்தில் நம்மை குத்தி கிழித்து பேசினாலும், தரம் தாழ்ந்து பேச வேண்டாம். நம் மீது எவ்வளவு தான் சேற்றை வீசினாலும், அதில் தாமரை மலர்ந்தே தீரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ‘தமிழ்நாடு நமோ வாரியர்ஸ்’ இணையதளத்தில் தங்களுடைய, வாட்ஸ் அப், இ-மெயில், முகநூல், டுவிட்டர் கணக்கு விவரங்களை தெரிவித்து, பதிவு செய்து கொண்டனர்.

Next Story