மதுரையில் மக்களவை தேர்தலை ஒத்திவைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சிகள் சார்பில் மனு


மதுரையில் மக்களவை தேர்தலை ஒத்திவைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சிகள் சார்பில் மனு
x
தினத்தந்தி 11 March 2019 7:17 AM GMT (Updated: 2019-03-11T12:47:47+05:30)

மதுரையில் மக்களவை தேர்தலை ஒத்திவைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை, 

நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது எனவும், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

மேலும், 21 சட்டமன்ற தொகுதிகளில், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள அதே நாளில் மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறவிருப்பதால், வாக்குப்பதிவில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.  எனவே, தென்மாவட்ட மக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரைத் திருவிழா நாளில் நடைபெற உள்ள தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 

இதையடுத்து, சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்க கோரி,  அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.  இதற்கு மத்தியில்,  சித்திரை திருவிழாவையொட்டி மதுரையில் தேர்தல் நடந்தால் பாதுகாப்பு அளிப்பது சிரமம் என்று மதுரையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.  தேவைப்பட்டால் கூடுதல் துணை ராணுவத்தை வைத்து தேர்தல் நடத்தலாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

அனைத்து கட்சி பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கூறியதாவது:- ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கும் படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மதுரையில் சித்திரை திருவிழாவுக்காக ஏப்ரல் 19 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என தேர்தல் ஆணையத்திடம் கூறப்பட்டது.  

சித்திரை திருவிழா தேரோட்டம் நண்பகல் 12 மணியளவில் முடிந்து விடும். வரிசையில் நிற்பவர்கள் 6 மணிக்கு மேல் எவ்வளவு நேரம் ஆனாலும் அனுமதிக்கப்படுவர்” என்றார். 

Next Story