திண்டுக்கல்லில் பயங்கரம் வெடிகுண்டு வீசி தம்பதி வெட்டி கொலை


திண்டுக்கல்லில் பயங்கரம் வெடிகுண்டு வீசி தம்பதி வெட்டி கொலை
x
தினத்தந்தி 12 March 2019 2:30 AM IST (Updated: 12 March 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் வெடிகுண்டை வீசி தம்பதி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியை சேர்ந்தவர் திருப்பூர் பாண்டி (வயது 43). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (40). இவர்களது மகன்கள் சந்திரசேகர், அசோக்குமார். கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த குமரேசன் (28) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சந்திரசேகர், அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது. இதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட குமரேசன் தரப்பினர் அவர்களை கொலை செய்ய திட்டமிடலாம் என போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

இதையடுத்து திருப்பூர் பாண்டி தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் கோவைக்கு சென்றுவிட்டார். அங்கு அவர்கள் கூலிவேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக திருப்பூர் பாண்டி தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டி நெசவாளர் காலனிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.

வெடிகுண்டு வீச்சு

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் திருப்பூர் பாண்டி, பஞ்சவர்ணம் மட்டும் இருந்தனர். அவர்களின் மகன்கள் மற்றும் உறவினர்கள் வெளியே சென்றிருந்தனர். இந்த நிலையில் காலை 10 மணி அளவில் அந்த வீட்டின் மீது சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதில் வீட்டின் கதவு சேதமடைந்தது. சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து பஞ்சவர்ணம் வெளியே வந்தார்.

அப்போது அங்கு கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிச்சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பஞ்சவர்ணம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டைவிட்டு வெளியே வந்த திருப்பூர் பாண்டி தனது மனைவியை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்ததையறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

பழிக்கு பழியாக கொலை

ஆனாலும் அந்த கும்பல் அவரையும் விரட்டிப்பிடித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பயத்தில் உறைந்தனர். பின்னர் இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இதற்கிடையே வீட்டுக்கு திரும்பி வந்த சந்திரசேகரும், அசோக்குமாரும் ரத்த வெள்ளத்தில் தனது தாய்-தந்தையர் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்தனர். பின்னர் தம்பதியர் உடல்களை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாகவே தற்போது தம்பதி படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story