மக்களை சந்தித்து நம்பிக்கையை பெற்றுவிட்டால் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி உறுதி -டாக்டர் ராமதாஸ் அறிவுரை


மக்களை சந்தித்து நம்பிக்கையை பெற்றுவிட்டால் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி உறுதி -டாக்டர் ராமதாஸ் அறிவுரை
x
தினத்தந்தி 12 March 2019 4:15 AM IST (Updated: 12 March 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

மக்களை சந்தித்து நம்பிக்கையை பெற்றுவிட்டால் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி உறுதி என்று பா.ம.க. தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது ஏன்?

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளது. ஜனநாயகத்தை பொறுத்தவரை மக்கள் தான் இறுதி எஜமானர்கள். அவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதன் மூலம் தான் அவர்களின் நம்பிக்கையை பெற முடியும். கடந்த காலங்களில் அந்த பணிகளை பா.ம.க. சிறப்பாக செய்திருக்கிறது.

இப்போதும்கூட தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காக முதலில் குரல் கொடுப்பதும், போராட்டம் நடத்தி உரிமைகளை பெற்றுக்கொடுப்பதும் பா.ம.க. தான். நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணியில் கூட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தான் பா.ம.க. இணைந்துள்ளது.

40 தொகுதிகளிலும் வெற்றி

எந்த தொகுதியில் எந்த கட்சி போட்டியிட்டாலும் அதை சொந்த தொகுதியாக நினைத்து பா.ம.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் பணியாற்ற வேண்டும். கிளை அளவில் தொடங்கி, தொகுதி அளவில் வரை பிரசாரக்குழுக்கள், ஒருங்கிணைப்பு குழுக்கள், வாக்குச்சாவடி பொறுப்புக்குழுக்கள் அமைக்க வேண்டும். தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த நிமிடத்தில் தொடங்கி வெற்றிக்கனியை பறிக்கும் வரையிலும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது அ.தி.மு.க. தலைமையிலான பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் அணியால் மட்டுமே சாத்தியம் என்பதை கடந்த கால ஆதாரங்களுடன் எடுத்துக்கூறுங்கள்.

மக்களை சந்தித்து அவர்களின் நம்பிக்கையை பெற்றுவிட்டால் அவர்கள் நம்மை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெற வைத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பார்கள். தமிழ்நாட்டில் 18 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றியை பரிசாக கொடுத்து அ.தி.மு.க. அரசை வலுப்படுத்துவார்கள். இது உறுதி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story