பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை,
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அரக்கர்களை தப்பவிடாமல் அனைவரையும் கைது செய்து கடுமையாக தண்டிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சொல்லும் உண்மை என்னவெனில் நம்மை சுற்றி மனிதர்கள் என்ற போர்வையில் மிருகங்கள் உலவிக்கொண்டிருக்கின்றன என்பது தான். காதல் என்று நாடகமாடும் எவரையும் இளம்பெண்கள் நம்பக்கூடாது. காதல் வலைவீசி வீழ்த்தும் மனித மிருகங்களிடம் எச்சரிக்கை தேவை.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை செய்தி உள்ளத்தை உறைய வைக்கிறது. மிருகங்களைவிட கொடிய இப்பாவிகளை கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும். அதேவேளையில், பாதிக்கப்பட்ட பெண்களை, வெளிப்படையான விசாரணைக்கு ஆளாக்காமல், அவர்களுக்கு தலைகுனிவு ஏற்படாத வகையில், மிகுந்த எச்சரிக்கையுடன் விசாரணை நடைபெற வேண்டும்.
இந்த இழிசெயலில் ஈடுபட்ட குற்றவாளிகள், அவர்களை பாதுகாக்க முனைந்தவர்கள், நடவடிக்கை எடுக்க தவறியவர்கள் அனைவரும், சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரம் இருப்பதால், உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மனிதாபிமானமின்றி மிருகத்தனமாக நடந்து கொண்ட குற்றவாளிகளை அடையாளம் காட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வர வேண்டும்.
உலகின் எந்தவொரு மூலையிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதத்தில் கடுமையான தண்டனை குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கடும் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். ஆளும் கட்சியினரின் தலையீடு இருக்கக்கூடும் என்பதால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும்.
ஆளும் வர்க்கம் இந்த பாலியல் வன்கொடுமைகளை மூடி மறைத்து, குற்றவாளிகளை தப்பிக்க விட முற்படுமானால், அது தமிழக மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம். இந்த படுபாதக செயலையும், அதற்கு துணைபோகும் அ.தி.மு.க. அரசின் அடாவடித்தனத்தையும் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம்.
Related Tags :
Next Story