டாஸ்மாக் கடைகளை கண்காணிக்கும் தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு மது விருந்தை தடுக்க அதிரடி
வாக்காளர்களுக்கு மது விருந்து படைப்பதை தடுக்கும் நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்கிறது.
சென்னை,
கடந்த சட்டசபை தேர்தலில் பூரண மதுவிலக்கு என்ற கொள்கையை முன்னிறுத்தி அனைத்து கட்சிகளும் பிரசாரத்தை கையில் எடுத்தன. அ.தி.மு.க. வெற்றி பெற்று மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்தது. மதுக்கடைகள் திறக்கும் நேரமும் குறைக்கப்பட்டன. அதன்பிறகு மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படாமல் இருந்து வருகிறது. தமிழக அரசுக்கு மதுபானம் விற்பனை செய்வதன் மூலமே அதிக வருவாய் கிடைக்கிறது. விழாக்காலங்கள் மற்றும் தேர்தல் காலங்களில் மதுபானங்கள் முக்கிய பொருளாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு கட்சியினரும் பிரசாரத்துக்கு மதுபான ஆசையை காட்டியே ஆட்களை திரட்டுகிறார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. எனவே தேர்தல் நேரங்களில் மது விற்பனை கிடுகிடுவென உயர்வது வழக்கம். சில கட்சிகள் வாக்காளர்களுக்கு மது விருந்து படைப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.
தேர்தல் ஆணையம் அதிரடி
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன. தேர்தல் முறைகேடுகளை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் வியூகம் அமைத்துள்ளது. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை கண்காணிக்க அதிரடி நடவடிக்கையை தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ளது. மேலும், மது விற்பனை தொடர்பாக தேர்தல் ஆணையம் சில வழிமுறைகளை வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை, மதுவிலக்கு ஆணையர் கிர்லோஷ் குமார் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தேர்தல் காலத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை குறித்த தகவலை தினந்தோறும் தெரிவிக்கவேண்டும். குறிப்பாக முந்தைய மாத சராசரி விற்பனையை விடவும் 30 சதவீதம் அதிக விற்பனை இருந்தால் அதுதொடர்பான அறிக்கையை மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில ஆயத்தீர்வைத்துறை அதிகாரிகள் சமர்ப்பிக்கவேண்டும். இந்த கூடுதல் மதுபானத்தை யார் வாங்கினார்கள்? என்று ஆயத்தீர்வை அதிகாரிகள் புலன்விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும்.
கண்காணிப்பு
மாநில அளவில் தினந்தோறும் மதுபானங்கள் உற்பத்தியாளர்களிடம் இருந்து எவ்வளவு கொள்முதல் செய்யப்பட்டது? அங்கிருந்து குடோனுக்கு அனுப்பியது எவ்வளவு? குடோனில் இருந்து மதுபான கடைகளுக்கு அனுப்பியது எவ்வளவு? என்ற தகவலை தலைமை தேர்தல் அதிகாரிக்கு, மதுவிலக்கு ஆணையர் அனுப்பவேண்டும்.
இதேபோல போலி மதுபானங்கள் எவ்வளவு பறிமுதல் செய்யப்பட்டது? என்ற விவரத்தையும் மாவட்ட கலெக்டருக்கு தினந்தோறும் அதிகாரிகள் அனுப்பவேண்டும். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக யாராவது மொத்தமாக மதுபானங்கள் வாங்குகிறார்களா? என்பதை கண்காணிக்கவேண்டும்.
இவ்வாறு இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story