மெட்ரோ ரெயில் திட்டத்தை அமல்படுத்தும் முன்பு நிலத்தடி நீரை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்ததா? ஐகோர்ட்டு கேள்வி


மெட்ரோ ரெயில் திட்டத்தை அமல்படுத்தும் முன்பு நிலத்தடி நீரை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்ததா? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 13 March 2019 9:15 PM GMT (Updated: 2019-03-14T02:07:08+05:30)

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததா? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை,

சென்னையில் உள்ள நீர்நிலைகளில் மழைநீரை சேகரிக்கவும், மழைநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் நீர் மேலாண்மை திட்டத்தை முறையாக அமல்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

நீர்நிலைகளை பாதுகாக்காவிட்டால் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்திற்கே சிக்கல் ஏற்பட்டுவிடும். கடலில் மட்டுமே தண்ணீரை பார்க்க முடியும். நீர் நிலைகளை பாதுகாக்க அரசு அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. அவர்கள் மெத்தனமாக செயல்படுகின்றனர்.

தண்ணீர் பஞ்சம்

தமிழக அரசு சென்னையில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் பொதுமக்களின் நலன் கருதி கொண்டு வந்தாலும், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு நிலத்தடி நீரை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

சென்னையில் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. எதிர்காலத்தில் சென்னையில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது என்பது வேதனையானது.

எனவே சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை தூர்வாரவும், மழைநீரை சேமிக்கவும், தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து வருகிற 18-ந் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Next Story