காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க. உள்பட 11 கட்சிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் மதுரை ஐகோர்ட்டு அதிரடி


காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க. உள்பட 11 கட்சிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் மதுரை ஐகோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 13 March 2019 10:00 PM GMT (Updated: 13 March 2019 8:52 PM GMT)

நோட்டீசுக்கு பதில் அளிக்க தவறியதால் காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க. உள்பட 11 கட்சிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

மதுரை,

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது வேட்பு மனுவில் அவர்களின் முழு விவரங்களும் தெரிவிப்பதில்லை. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏக்களாக உள்ள 34 பேரின் வேட்புமனுக்கள் குறைபாடுகளுடன் இருந்தன. இதில் இருந்து அவற்றை தேர்தல் அதிகாரிகள் முறையாக பரிசீலனை செய்யவில்லை என்பது தெரியவருகிறது.

எனவே தேர்தலில் வேட்பாளர்கள் செலுத்தும் டெபாசிட் தொகை, எப்.ஐ.ஆர். நிலுவை, வங்கி கணக்கு விவரம், சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை குறிப்பிட வேட்பு மனுவில் மாற்றம் செய்யவும், குறைபாடுடைய வேட்புமனுக்களை தள்ளுபடி செய்யவும், வேட்பு மனுக்களை முறையாக பரிசீலிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.

பிரமாணப்பத்திரம்

அதே போல எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி நிதியாக ஒதுக்கப்படும் பல கோடி ரூபாயும் முறையாக செலவு செய்து, தங்களது தொகுதியும் மேம்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.

இதை தவிர்க்க வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை தனி பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

16 கட்சிகளுக்கு நோட்டீஸ்

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கில் பா.ஜ.க., காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., பா.ம.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் லீக், தமிழ் மாநில முன்னேற்றக்கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய 16 கட்சிகளை எதிர்மனுதாரராக சேர்த்து, அக்கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி சார்பில் வக்கீல்கள் ஆஜராகினர். மற்ற கட்சிகள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. அந்த கட்சிகளின் சார்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

தலா ரூ.1 லட்சம் அபராதம்

இதையடுத்து நீதிபதிகள், அரசியல் கட்சிகள் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அந்த கட்சிகளே கோர்ட்டு உத்தரவை பின்பற்றாதது வருத்தமளிக்கிறது.

எனவே கோர்ட்டு நோட்டீசை பெற்றுக்கொண்ட பின்னரும், உரிய பதில் அளிக்காத காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. உள்பட 11 கட்சிகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் சங்கத்துக்கு நிவாரண நிதியாக 2 வாரத்தில் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட கட்சிகளின் அலுவலக சொத்துக்களை ஏலம் விட்டு, அதன்மூலம் இந்த தொகையை அதிகாரிகள் வசூலிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story