பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது சம்பவம் நடந்த இடத்தில் உயர் அதிகாரிகள் ஆய்வு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பெண் போலீஸ் சூப்பிரண்டு விசாரணையை தொடங்கினார்.
கோவை,
பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி, சீரழித்த வழக்கில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் திருநாவுக்கரசு (வயது 27), அவருடைய நண்பர்கள் என்ஜினீயர் சபரிராஜன் (27), சதீஷ் (27) மற்றும் வசந்தகுமார் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது.
உயர் அதிகாரிகள்
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில், போலீசார் நேற்று முன்தினம் இரவில் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் இந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசாரிடம் வழக்கு குறித்து கேட்டறிந்தனர். இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர் நேற்று காலை கோவை வந்தார்.
பின்னர் அவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனிடம் இந்த வழக்கு குறித்த விவரத்தை கேட்டறிந்தார்.
அதன்பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பல்வேறு கோணங்களில் விசாரணை
இந்த வழக்கை விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் ஒரு போலீஸ் துணை சூப்பிரண்டு, 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். வழக்கு தொடர்பாக ஆவணங்களை பெற்று, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.
இப்போதுதான் நாங்கள் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளதால், இதில் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதை கூற முடியாது. விசாரணை நடத்தினால்தான் முழு விவரமும் தெரிய வரும். எனவே இந்த சம்பவத்தில் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறதோ அவர்கள் அனைவரும் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள்.
காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
கைதான 4 பேரும் தற்போது கோவை மத்திய சிறையில் உள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய முடிவு செய்து உள்ளோம். இதில் சில சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து 4 பேரையும் காவலில் எடுத்து விசாரணை செய்வோம்.
சி.பி.ஐ.க்கு மாற்றினால் எங்களிடம் உள்ள ஆவணங்களை ஒப்படைப்போம்.
பாதிக்கப்பட்ட பெண்கள்
மேலும் இந்த வழக்கில் தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தப்படும். பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் என்னென்ன வீடியோக்கள் இருந்தன என்பதை தெரிந்து கொள்ள ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. ஆய்வு அறிக்கை வந்ததும் அதை வைத்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
போலீசார் நடத்திய விசாரணை சரியாக இல்லை என்று கூறுகிறார்கள். தற்போதுதான் நாங்கள் விசாரணையை தொடங்கி இருக்கிறோம். எனவே உடனடியாக எதுவும் சொல்ல முடியாது. போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் விசாரணை நடப்பதால், விசாரணை நேர்மையாகதான் இருக்கும். உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடப்பதால் அரசியல் அழுத்தம் கொடுக்க முடியாது. விசாரணை முடிவில்தான் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை கூற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பண்ணை வீட்டில் ஆய்வு
பின்னர் நேற்று மாலையில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் மற்றும் போலீசார் ஆனைமலை அருகே உள்ள சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அந்த வீட்டிற்குள் 6 நாற்காலிகளை சேர்த்து கட்டிலாக மாற்றி அதன் மீது மெத்தை போடப்பட்டு இருந்தது. இந்த பண்ணை வீட்டில்தான் திருநாவுக்கரசு உள்பட 4 பேரும் பல பெண்களை வரவழைத்து சீரழித்தது தெரியவந்தது. பின்னர் அந்த வீடு முழுவதும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் சில ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.
முன்னதாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் அதிகாரிகள் தலைமையில் மற்றொரு பிரிவினர் மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் ஆய்வு செய்தனர். அங்கும் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது.
Related Tags :
Next Story