மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் சென்னை கல்லூரி மாணவிகள் கலந்துரையாடலில் ராகுல் அறிவிப்பு


மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் சென்னை கல்லூரி மாணவிகள் கலந்துரையாடலில் ராகுல் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 March 2019 4:15 AM IST (Updated: 14 March 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் கொண்டுவரப்படும்’ என்று கல்லூரி மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கூறினார்.

சென்னை, 

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று சென்னை வந்தார். சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

ஜீன்ஸ் பேன்ட், டி.சர்ட்டுடன் இளமை தோற்றத்தில் வந்த ராகுல்காந்தி மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியுடன் உரையாடினார். அவர் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ (மாற்றத்தை உருவாக்குபவர்கள்) என்ற தலைப்பில் மாணவிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

இந்தியாவில் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் அதற்கு குறைந்த அளவிலேயே செலவிடப்படுகிறது. நிதி ஒதுக்குவது மட்டுமல்லாமல் உயர்கல்வி நிறுவனங்களை சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும்.

தற்போதைய கல்வி முறை எதிர்கால தலைமுறைக்கு உகந்ததாக இல்லை. சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கல்வி தரம் உயர வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்விக்கான நிதி உயர்த்தப்படும். வட இந்திய பெண்களை விட தென் இந்திய பெண்கள் பாலின சமத்துவம் பெற்றுள்ளதாக நான் நம்புகிறேன்.

ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம்

பெண்கள் தங்களை இரண்டாம் நிலை என்று கருத வேண்டாம். சமநிலை என்றே கருத வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். அதேபோன்று நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா 17-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும். 24 மணி நேரத்தில் சீனாவில் 55 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 300 வேலைவாய்ப்புகளே உருவாக்கப்படுகிறது.

பா.ஜ.க. கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி மிகவும் சிக்கலான முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. பல அடுக்குமுறை கொண்ட ஜி.எஸ்.டி.யை ஏற்க முடியாது. ஜி.எஸ்.டி வரியை சீர்திருத்தம் செய்வதன் மூலம் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் கொண்டு வரப்படும். அது ஒரே வரியாக இருக்கும். அதுவும் குறைந்த வரியாக இருக்கும். பணமதிப்பு நீக்கத்தால் நாட்டுக்கு எந்த பலனும் இல்லை. பண மதிப்பு நீக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை மக்கள் அனைவரும் உணர்ந்துள்ளார்கள்.

பறிமுதல் செய்யப்படும்

நீரவ் மோடிக்கு மத்திய அரசு ரூ.35 ஆயிரம் கோடியை கடனாக வழங்கியது. அவர், எத்தனை பேருக்கு வேலை தந்தார்? நீரவ் மோடி, விஜய் மல்லையா, முகுல் சோக்‌ஷி ஆகியோர் மக்கள் பணத்தை திருடி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்படும்.

அனில் அம்பானியின் நிறுவனம் விமானங்களை தயாரித்தது கிடையாது. எந்த அடிப்படையில் எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ரபேல் விமான ஒப்பந்தம் மறுக்கப்பட்டு அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது? ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தீவிரவாத தாக்குதல் குறைவாக இருந்தது. புலவாமா தாக்குதலை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. ராணுவத்தினரின் குறைகளை களைய வேண்டும் என்பது தான் காங்கிரசின் நிலைப்பாடு.

ஊழல் தடையாக உள்ளது

பொருளாதார நிலையை உயர்த்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். காஷ்மீரில் அதிக தொழில் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதன்மூலம் பயங்கரவாதத்தை தடுக்க முடியும்.

நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் நிர்வாகத்தில் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தாயாரின் திறமை மிகவும் பிடிக்கும்

இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எப்படி பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதை எனது தாயார் சோனியாகாந்தி எனக்கு கற்று கொடுத்துள்ளார். எனது தாயாரின் திறமை எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த திறமை எனக்கும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து மாநிலங்களுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஒரு மாநில மக்கள் மற்ற மாநில மக்களை எதிரியாக நினைத்து சண்டை போடக்கூடாது. மற்ற மாநில மக்களை சகோதரர்களாக நினைக்க வேண்டும். எனது கொள்கை எப்போதுமே பரந்து விரிந்த மனப்பான்மையை சார்ந்தது.

குறிப்பிட்ட ஒரு கொள்கை என்பது நாட்டை கட்டுப்படுத்தக்கூடாது. பிரதமர் மோடி சுப்ரீம் கோர்ட்டு, அரசியல் சாசன அமைப்புகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆவேசம்-புன்முறுவல்

நிகழ்ச்சி முடிந்ததும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் தன்னை டுவிட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் பின்தொடருங்கள் என்று ராகுல் வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய அரசு பற்றியும், மோடியை பற்றியும் பேசும்போது ராகுலின் முகத்தில் ஆவேசம் தெரிந்தது. அதே நேரத்தில் மாணவிகளின் கேள்விகளை புன்முறுவலுடனே அவர் எதிர்கொண்டார்.

காலை 11.30 மணிக்கு தொடங்கிய கலந்துரையாடல் 12.45 மணிக்கு நிறைவு பெற்றது. சுமார் 1¼ மணி நேரம் ராகுல் மாணவிகளுடன் கலந்துரையாடினார். அவருடன் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வந்தார். கல்லூரி வாசல் முன்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் ராகுலுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

Next Story