மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம்
மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் அந்த சமயத்தில் மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடக்கிறது.
ஏப்ரல் 18-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டமும், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கின்றன. அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டால், பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு வருவது, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகும்.
எனவே மதுரை நாடாளுமன்ற தொகுதி தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான விசாரணையை மேற்கொண்ட உயர்நீதிமன்றம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் கமிஷனும் மதுரை சித்திரை திருவிழாவை கவனத்தில் கொள்ளவில்லை.
தேனி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளிலும் இதுபோன்ற உள்ளூர் திருவிழாக்கள் நடக்க இருப்பதால், அவற்றையும் தேர்தல் கமிஷன் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே தேர்தல் தேதியை மாற்றி அறிவிப்பது குறித்து 14-ந் தேதி இந்திய தேர்தல் கமிஷன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இன்று பதிலளித்த தேர்தல் ஆணையம், மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற முடியாது என கூறியுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை மாலை இரண்டு மணிநேரம் அதிகரிக்கலாம் என கூறியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பதிலில் அதிருப்தி அடைந்த நீதிமன்றம், கடமைக்காக தேர்தலை நடத்தாதீர்கள், களநிலவரம் அறியாமல் இதுபோன்ற முடிவுகளை அதிகாரிகள் எடுக்கிறார்கள். விழாவை கருத்தில் கொள்ளாமல் காலை 6 மணி முதல் தேர்தலை நடத்த திட்டமிட்டது எப்படி? எனவும் கேள்வியை எழுப்பியது.
இவ்விவகாரத்தில் பதில் அளிக்காத தமிழக தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யாததில் கடிந்து கொண்ட நீதிமன்றம், நாளை நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related Tags :
Next Story