பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்: புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட வேண்டாம் சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஒப்படைக்க வேண்டுகோள்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தெரிவிக்கலாம் என்றும், புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தகவல் தெரிவிக்கலாம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் கோவை அவினாசி ரோட்டில் செயல்படும் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.
மேலும் இந்த வழக்கு தொடர்பான வீடியோ ஆதாரங்களோ, புகைப்படங்களோ வைத்திருப்பவர்களும் கோவை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் சென்று கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் அல்லது புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் கொடுப்பவர்களின் பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும்.
வீடியோ ஆதாரங்கள்
இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையோ, வீடியோ ஆதாரங்களையோ சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலோ அல்லது தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாலோ 94884 42993 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம். cbcidcbecity@gmail.com என்ற இணையதள முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story