பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு - ஐகோர்ட்


பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு - ஐகோர்ட்
x
தினத்தந்தி 15 March 2019 9:48 PM IST (Updated: 16 March 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியானது, பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்களை காவல்துறை வெளியிட்டது போன்ற சம்பவங்களில் விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் மேலும் பரவுவதை தடுக்க, அதனை இணையங்களில் நீக்கவும் உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இதனை விசாரித்த நீதிமன்றம் பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பற்றிய விவரங்களை வெளியிட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. அடையாளங்கள் வெளியிடப்பட்ட பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

பலாத்கார வழக்குகளை கையாள ஒரு தனி மையத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி அந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுகின்றனவா? என்பதை அடுத்த விசாரணையில் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. 

பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை திரும்பப்பெற்று, பாதிக்கப்பட்டவரின் தகவல்களை நீக்கி, புதிதாக அரசாணை வெளியிட வேண்டும் என உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு, பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதுபோன்ற வீடியோக்கள், புகைப்படங்களை வைத்திருப்பதும், பகிர்வதும் குற்றமாகும், இதுதொடர்பாக தமிழக அரசு விரிவாக விளம்பரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

Next Story