ராகுல்காந்தி பேசிய கல்லூரி மீது நடவடிக்கை: தமிழக அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்


ராகுல்காந்தி பேசிய கல்லூரி மீது நடவடிக்கை: தமிழக அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்
x
தினத்தந்தி 15 March 2019 7:15 PM GMT (Updated: 15 March 2019 5:12 PM GMT)

ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு முன்வருமேயானால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக எச்சரிக்க விரும்புகிறேன்.

சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றது எந்த அடிப்படையில் என்று விளக்கம் கோரி அறிக்கை அனுப்பும்படி கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனர் தாக்கீது அனுப்பியுள்ளார்.

பொதுவாக, கல்லூரியில் நடைபெறுகிற விழாக்களில் அரசியல் தலைவர்கள் எந்த அடிப்படையில் பங்கேற்று உரை நிகழ்த்துவார்களோ, அதைப்போலத் தான் ராகுல்காந்தியும் சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் அழைக்கப்பட்டு சிறப்புரை ஆற்றினார்.

இதில் ஆட்சேபனை செய்வதற்கு தமிழக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?. இத்தகைய தேவையற்ற நடவடிக்கையின் மூலம் ராகுல்காந்தியின் செயல்பாட்டில் குந்தகம் விளைவித்துவிட முடியும் என்று மத்திய – மாநில அரசுகள் கருதுமேயானால் அது பகல் கனவாகத்தான் முடியும்.

ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசு முன்வருமேயானால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக எச்சரிக்க விரும்புகிறேன். எனவே, பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனர் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பியிருக்கிற நோட்டீசை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story