பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பிரதமரும், மத்திய மந்திரிகளும் பேசாதது ஏன்? நடிகை குஷ்பு கேள்வி


பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: பிரதமரும், மத்திய மந்திரிகளும் பேசாதது ஏன்? நடிகை குஷ்பு கேள்வி
x
தினத்தந்தி 15 March 2019 8:00 PM GMT (Updated: 2019-03-15T22:50:54+05:30)

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பிரதமரும், மத்திய மந்திரிகளும் பேசாதது ஏன்? என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:–

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் வெளியிடப்பட்டு இருக்கிறது. அரசு சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலியல் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்துபவர்களை அடக்குவது சரியல்ல.

அரசாங்கமும், போலீசாரும் மன்னிப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு பெண்ணின் அடையாளத்தை பாதுகாக்க முடியாத அரசாங்கம், தமிழ்நாட்டு மக்களை எப்படி பாதுகாப்பார்கள்? பிரதமர் இதுகுறித்து வாய் திறக்காதது ஏன்? எந்த ஒரு பிரச்சினை தமிழகத்தையும், இந்தியாவையும் பாதிக்கிறதோ அதை பற்றி பிரதமர் பேசமாட்டார்.

பா.ம.க., பெண்களுக்கு எதிராக கொடுமை நடப்பதை பற்றி பேசுகிறார்கள். அவர்கள் இந்த வி‌ஷயத்தை பற்றி பேசாதது ஏன்?. மத்திய மந்திரிகள் தமிழகம் வந்து செல்கிறார்கள். அவர்கள் கூட இதை பற்றி பேசவில்லையே? பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்த அலறல் சத்தத்தை கேட்ட அனைத்து பெண்களும் சொல்வதற்கு வார்த்தை இல்லாமல் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story