பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை மாணவிக்கு ரூ.25 லட்சம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை மாணவிக்கு ரூ.25 லட்சம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 March 2019 5:45 AM IST (Updated: 16 March 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பற்றிய விவரங்களை வெளியிட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறிய மதுரை ஐகோர்ட்டு, அந்த மாணவிக்கு ரூ.25 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மதுரை, 

பொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் பலாத்காரம்

இந்த விவகாரம் தொடர்பாக, திருச்சியை சேர்ந்த இளமுகில் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

சமூக வலைத்தளங்களால் கல்வி, தகவல்தொடர்பு போன்ற பல்வேறு நன்மைகள் இருந்தும், தீமைகள் அதிக அளவில் உள்ளன. பாலியல் உள்பட பல்வேறு கொடூர குற்றங்கள் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பரப்பப்படுகிறது.

பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களையும், அடையாளங்களையும் முதல் தகவல் அறிக்கை மற்றும் கோர்ட்டு ஆவணங்கள், ஊடகங்களில் வெளியிடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 228ஏ பிரிவின் கீழ் 6 மாதத்தில் இருந்து 2 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கலாம்.

சமீபத்தில் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் புகார் அளித்த பெண்ணின்(கல்லூரி மாணவி) விவரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்.

விரைவான விசாரணை

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவாக முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், பாலியல் வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு விசாரணை படை அமைக்கவும், பாலியல் வழக்கு விசாரணையில் சுப்ரீம்கோர்ட்டு பிறப்பித்த வழிகாட்டுதல்களை பின்பற்றவும், பொள்ளாச்சி பாலியல் சம்பவ வீடியோ, புகைப்படம், ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.

விதிகள் கடைபிடிக்கப்படவில்லை

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் என்.செந்தில்குமார், ஏ.கே.மாணிக்கம் ஆகியோர் வாதாடுகையில், “பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது என சட்டம் உள்ளது. இதை கடைபிடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டும் உரிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆனால் பொள்ளாச்சி விவகாரத்தில் இது முறையாக கடைபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையிலும் கூட பாதிக்கப்பட்டவர் தொடர்பான அடையாளம் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது ஏற்புடையதல்ல” என்று கூறினார்கள்.

அடையாளத்தை வெளியிட்டது ஏன்?

இதையடுத்து நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட பெண்கள் பாதிக் கப்பட்டுள்ளது தெரியவருகிறது. துணிச்சலாக முன்வந்து புகார் அளித்த பெண்ணின் தனிப்பட்ட விவரத்தை வெளியிட்டது ஏன்? இனி இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க யார் முன்வருவார்கள்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது மனுதாரர் வக்கீல்கள், “இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ‘பார்’ நாகராஜ் சம்பந்தப்பட்ட வீடியோக்களும் பரவி வருகின்றன. இதை பார்த்த உள்ளூர் மக்கள் அவருடைய பாருக்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கினர். இதற்கிடையே பாலியல் விவகாரத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கோவை கலெக்டரிடம் ‘பார்’ நாகராஜ் மனு கொடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன” என்றும் தெரிவித்தனர்.

அதற்கு நீதிபதிகள், இது எப்படி சாத்தியமாகும்? என்று கேள்வி எழுப்பினர்.

நீதிபதிகள் உத்தரவு

விசாரணையின் முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஒருவனை நம்பிச் சென்ற பெண்ணை சில விரோதிகள் சூழ்ந்து துன்புறுத்தும் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் சமூக வலைத்தளங்களில் பார்த்து உள்ளனர். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் இதுபோல நடப்பதற்கு தூண்டுவதாக அமையும் என்று மனநல டாக்டர் ஷாலினி தெரிவித்து உள்ளார்.

எனவே பொள்ளாச்சி சம்பவ வீடியோக்களை பொதுநலன் கருதி சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும். இதற்காக மத்திய அரசையும், இணையதள சேவை வழங்குபவர்கள் சங்கத்தின் செயலாளரையும் எதிர்மனுதாரராக இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து சேர்க்கிறது.

தைரியமாக புகார் அளித்த பெண்

பாலியல் சம்பவ வீடியோக்கள் அடங்கிய செல்போன்களுடன் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது சகோதரரும் போலீசில் புகார் செய்து, செல்போன்களையும் ஒப்படைத்து உள்ளனர். செல்போன்களில் இருந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவாமல் போலீசார் தடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.

பொள்ளாச்சி சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. அவர்களை மிரட்டி மீண்டும், மீண்டும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.

அவர்களில் ஒரே ஒரு பெண் மட்டும் தைரியமாக, மனிதாபிமானமற்றவர்களின் அட்டூழியங்கள் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் போலீசில் புகார் செய்து உள்ளார். ஆனால் அவரது பெயர் உள்ளிட்ட தகவல்களை ரகசியமாக வைக்க போலீசார் தவறிவிட்டனர். இந்த வழக்கின் தொடக்கத்திலேயே பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை போலீசார் வெளியிட்டது கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கூடாது என்ற சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும், பொள்ளாச்சி விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் பின்பற்றவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை வைத்து ஆயிரக்கணக்கான வீடியோக்கள் எடுக்கப்பட்டு உள்ளன. இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய தனிப்பட்டவரின் விவரங்களை போலீசார் வெளிப்படுத்தி உள்ளனர்.

ரூ.25 லட்சம் இழப்பீடு

அதிகாரிகளின் இந்த செயல்பாட்டால் சம்பந்தப்பட்ட பெண்ணின் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும். எனவே அவரை வெளிமாவட்டத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று மனநல ஆலோசனை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அவருக்கு இழப்பீடாக ரூ.25 லட்சத்தை வழங்க வேண்டும். அவருடைய பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாக காரணமாக இருந்த போலீஸ் சூப்பிரண்டு மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

பலாத்கார வழக்குகளை கையாள ஒரு தனி மையத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி அந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுகின்றனவா? என்பதை அடுத்த விசாரணையில் தெளிவுபடுத்த வேண்டும்.

விழிப்புணர்வு

இணையதளத்தின் நன்மை, தீமைகளை அனைவரும் அறியும் வகையில், குறிப்பாக குழந்தைகள் தெரிந்து கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம் நாட்டில் நூறு கோடி பேரின் கைகளில் செல்போன்கள் உள்ளன. தினமும் செல்போன் இல்லாமல் சிறிது நேரத்தை கூட நம்மால் கழிக்க முடியாது என்ற நிலையில் உள்ளோம். ஒரு சிலர் செல்போன்களுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகளை மத்திய, மாநில அரசுகள் சினிமா, குறும்படம், துண்டு பிரசுரங்கள் மூலம் எச்சரிப்பதுடன், அனைவருக்கும் விழிப்புணர்வு செய்து தெரியப்படுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் இணையதளம், செல்போனின் நன்மை, தீமைகளை பள்ளி, கல்லூரி பாடங்களிலும் சேர்க்க வேண்டும். பெற்றோரின் அரவணைப்பு இல்லாததன் காரணமாக பெண் குழந்தைகள் பாதை மாறிச் செல்கின்றனர். இதை தவிர்க்க, நாள்தோறும் தங்களது குழந்தைகளிடம் குறிப்பிட்ட நேரத்தை பெற்றோர் செலவிடுவது அவசியம். தேவையான அன்பை செலுத்தினால் குழந்தைகள் பாதை மாறி செல்வது தடுக்கப்படும்.

தகவல்களை நீக்க உத்தரவு

பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை திரும்பப்பெற்று, பாதிக்கப்பட்டவரின் தகவல்களை நீக்கி, புதிதாக அரசாணை வெளியிட வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் இணையத்தளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வீடியோக்கள், புகைப்படங்களை வைத்திருப்பதும், பகிர்வதும் குற்றம். இதுதொடர்பாக தமிழக அரசு விரிவாக விளம்பரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம்

அத்துடன் இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டின் வரம்புக்கு அப்பாற்பட்டது என்பதால், இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுவதாகவும் அப்போது நீதிபதிகள் கூறினார்கள்.

Next Story