விவசாய நிலங்களில் உள்ள 110 டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே மூட வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் மதுபானக்கடைகளை உடனடியாக மூடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி நாச்சிமுத்து. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளுக்கு அருகேயுள்ள நிலங்களில் விவசாயம் நடைபெறுகிறது. அதுமட்டுமல்ல அந்த வழியாக செல்லும் சாலையைத்தான் மாணவர்களும் பயன்படுத்துகின்றனர். வேறு இடத்தில் இயங்கி வந்த மதுபானக்கடையை கடந்த டிசம்பர் மாதம் அதிகாரிகள் விவசாய விளைநிலத்தில் அமைத்துள்ளனர். இதனால், விவசாய பணிகளும் பாதிப்படைந்துள்ளது. எனவே அந்த டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் எத்தனை உள்ளன? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மது அருந்துவதை தடுக்க ஒவ்வொரு டாஸ்மாக் பார்களிலும் கண்காணிப்பு கேமராக்களை ஏன் பொருத்தக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அட்வகேட் ஜெனரல், ‘ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், தற்போது 110 மதுபானக்கடைகள் உரிய அனுமதியின்றி விவசாய நிலங்களில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், “விவசாய நிலங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை வருகிற 18-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story