நாடாளுமன்றம், 18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு மு.க.ஸ்டாலின் பேட்டி
நாடாளுமன்ற தேர்தல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
நாளை வேட்பாளர் பட்டியல்
கேள்வி:-விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிட போகிறது?
பதில்:-அவர்கள் கட்சியின் சார்பில் வேட்பாளரை அறிவிக்கின்ற போது, அதை அவர்கள் தெரிவிப்பார்கள்.
கேள்வி:- தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?. நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தலுக்கு தனித்தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படுகிறதா?
பதில்:-தி.மு.க. தனியாக தேர்தல் அறிக்கையை தயாரித்துக்கொண்டிருக்கின்றது. தற்போது அந்தப்பணிகள் முடிவடையக்கூடிய சூழ்நிலைக்கு வந்திருக்கிறது. இன்னும் 5 நாட்களுக்குள் முறையாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒட்டுமொத்தமாக அறிக்கை தரப்படும். அதேபோல், 18 தொகுதிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரப்போகின்றது அதற்கும் தனியாக தயாரிக்கப்பட்டு அதுவும் முறையாக வழங்கப்படும்.
கேள்வி:-தி.மு.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?
பதில்:-17-ந்தேதி (நாளை) வெளியிடப்படும்.
கேள்வி:-இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?
பதில்:-நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகின்ற போது 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலையும் தி.மு.க வெளியிடும்.
பதிலடி கொடுக்கும் வகையில் தேர்தல் பிரசாரம்
கேள்வி:-கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரசாரத்தை மேற்கொள்வீர்களா?
பதில்:-நாகர்கோவிலில் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறோம். அதுபோல், இனி தொடரும்.
கேள்வி:-விவசாயிகளுக் கான அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இருக்கிறதா?
பதில்:-அதை இப்பொழுதே சொல்லிவிட்டால், அதன்பிறகு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட வேண்டியது இல்லையே.
கேள்வி:-உங்களது தேர்தல் பிரசாரப் பயணத்தை எப்பொழுது தொடங்கவிருக்கின்றீர்கள்?
பதில்:-அதுகுறித்த அறிவிப்பும் முறையாக வெளியிடப்படும்.
கேள்வி:-சமூக வலைத்தளங்களில் உங்களுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறதே?
பதில்:-அவை அனைத்தும் திட்டமிட்டு செய்யக்கூடிய பிரசாரம். அதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கக்கூடிய வகையில் எங்களது பிரசாரம் அமையும்.
பொள்ளாச்சி பிரச்சினை எதிரொலிக்கும்
கேள்வி:-பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாட்டில் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவை, வருகின்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று நினைக்கின்றீர்களா?
பதில்:-எதிரொலிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. காரணம் ஆளுங்கட்சியே, குற்றவாளிக்கு துணை நின்றுகொண்டிருக்கின்றது. அதை எதிர்த்து பொதுமக்கள் போராடுகின்றார்கள், மாணவர்கள் போராடுகின்றார்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு பல போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அதனை, திசை திருப்ப வேண்டும் என்பதற்காகத்தான் என்னுடைய மருமகன் சபரீசன் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றார்கள். என்னுடைய தூண்டுதலின் பேரில் தான் இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றது என்று புகார் அளித்திருக்கிறார்கள். எனவே, சட்ட ரீதியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன் நீதிமன்றத்தையும் இது சம்பந்தமாக நாட போகின்றேன்.
கேள்வி:-மீதமிருக்கும் 3 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று நீங்கள் தொடர்ந்த வழக்கில் 2 வார காலம் அவகாசம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது அதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்? தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கின்றதா?
பதில்:-வாய்ப்பு வேண்டும் என்பதற்காகத்தான் நீதி மன்றத்தை நாடி இருக்கின்றோம். நீதி மன்றத்தைப் பொறுத்த வரையில் நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், தேர்தல் கமஷன் சார்பில் ஆஜர் ஆனவர்கள் 2 வார காலம் நேரம் கேட்டு வாங்கியிருக்கின்றார்கள். தொடர்ந்து பார்ப்போம். நடத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். நடத்தக்கூடாது என்பது ஆளும் கட்சியில் இருக்கக்கூடிய அதேபோல் மத்தியில் இருக்கக்கூடிய அரசினுடைய நிலை.
தயாராக இருக்கிறார்கள்
காரணம் அது நடந்தால் தமிழ்நாட்டில் இப்போது நடந்து கொண்டிருக்கின்ற ஆட்சி இருக்காது. அதற்காக, இது திட்டமிட்டு நடத்தக்கூடிய ஒரு சதி அதை முறியடிப்பதற்குத் தான் நீதிமன்றத்திற்கு நாங்கள் சென்றுள்ளோம். என்ன செய்தாலும், மாநிலத்தில் இங்கிருக்கக்கூடிய ஆட்சியை, மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கின்றார்கள். அந்த பாதையை நோக்கி தான் நாங்களும் சென்று கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
தீர்மானம்
முன்னதாக, தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடூர வழக்கில் குற்றவாளிகளை தப்ப விடாமல் ஐகோர்ட்டு கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், மு.க.ஸ்டாலின், வைகோ, கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன், காதர்மொய்தீன், பாரிவேந்தர், வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு), தேவராஜன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) ஆகியோர் கையெழுத்திட்டனர்.
Related Tags :
Next Story