நாடாளுமன்ற தேர்தல் திருவிழா ஆவணப்படமாகிறது 21 மாநிலங்களில் குழுவினர் படமாக்குகிறார்கள்
நாடாளுமன்ற தேர்தல் திருவிழா ஆவணப்படமாகிறது. 21 மாநிலங்களில் தேர்தல் நடவடிக்கைகளை படம் பிடிக்கிறார்கள்.
சேலம்,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் திருவிழாவை அனைத்து நாடுகளும் உற்று நோக்கி வருகின்றன. அதிகமான மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் எவ்வாறு நாடாளுமன்ற தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை அறிய வெளிநாட்டினர் ஆர்வமாக உள்ளனர்.
இந்த தேர்தல் நடவடிக்கைகளை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த “நேஷனல் ஜியோகிராபி” சேனல் ஆவணப்படம் எடுக்க முடிவு செய்தது. இதற்காக அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரினர். இதையடுத்து அவர்களுக்கு தேர்தல் ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த உத்தரவு நகல், அவர்கள் எந்த மாநிலத்திற்கு செல்கிறார்களோ, அங்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தல் எவ்வாறு நடக்கிறது? என்பதை வெளிநாட்டினர் ஆவணப்படம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில், “நேஷனல் ஜியோகிராபி” சேனலை சேர்ந்தவர்கள் டெல்லியில் இருந்து தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். அதன்படி சேலம் மாவட்டத்திற்கு 3 பேர் கொண்ட குழு ஆவணப்படம் எடுப்பதற்காக வந்துள்ளது. இந்த குழுவில் உள்ளவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களை வீடியோ எடுத்து வருகிறார்கள்.
அதாவது தேர்தல் தொடர்பாக கலெக்டர் ரோகிணி நடத்தும் ஆலோசனை கூட்டங்கள், இதில் அவர் தேர்தல் நடத்துவதற்காக தெரிவிக்கும் ஆலோசனைகள், கூட்டத்தில் எந்த மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்கிறார், மின்னணு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி, அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தேர்தல் நடத்தை விதிகள் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது, அதற்காக எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும் எதற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படுகிறது, குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஏன் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பன உள்பட பல்வேறு நடவடிக்கைகளை வீடியோவாக எடுத்து வருகிறார்கள். தேர்தல் முடியும் வரை அவர்கள் தேர்தல் நடவடிக்கைகளை பதிவு செய்ய உள்ளனர்.
இதுகுறித்து கலெக்டர் ரோகிணி கூறுகையில், தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொள்வதற்காக தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று “நேஷனல் ஜியோகிராபி” சேனலை சேர்ந்த 3 பேர் குழு வந்துள்ளது. இந்த குழுவினர் ஜனநாயக நாடான இந்தியாவில் சுதந்திரமான தேர்தல் குறித்து ஆவணப்படம் தயாரிக்கிறார்கள் என்றார்.
Related Tags :
Next Story