சோழவரத்தில் உள்நாட்டு விமான சேவையை தொடங்க திட்டம் விமானப்படைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சோழவரத்தில் உள்நாட்டு விமான சேவையை தொடங்க திட்டம் விமானப்படைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 17 March 2019 2:45 AM IST (Updated: 17 March 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

சோழவரத்தில் உள்நாட்டு விமான சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அங்கு விமானப்படைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

படிப்பு, வேலை, மருத்துவ சிகிச்சை, சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்வோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உள்நாட்டிலும் விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

முக்கிய விமானநிலையங்களில் ஒரு விமானம் தரையிறங்குவதும் அடுத்த வினாடியே மற்றொரு விமானம் வானில் பறப்பதும் என விமான போக்குவரத்து பரபரப்பாக இருப்பதை காண முடிகிறது. எனவே நாடு முழுவதும் விமான போக்குவரத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்தது.

13 இடங்கள்

அதன்படி 2017-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், நாடு முழுவதும் பயன்பாட்டில் இல்லாத, பயன்பாடு குறைந்த 50 விமான ஓடுதளப்பாதைகள், விமானநிலையங்கள் ‘உதான்’ எனப்படும் பிராந்திய விமான இணைப்பு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

இந்த பட்டியலில் அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், ஓசூர், கயத்தாறு, நெய்வேலி, ராமநாதபுரம், சேலம், சூளூர், தாம்பரம், தஞ்சை, உளுந்தூர்பேட்டை, வேலூர் என தமிழகத்தை சேர்ந்த 13 இடங்கள் இடம் பெற்றன. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

சோழவரம் விமான ஓடுதளம்

விமான நிலைய மேம்பாடு திட்டத்தில் இடம் பெற்றுள்ள சோழவரம் சென்னை நகரின் மைய பகுதியில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 2-ம் உலகப்போரின் போது விமானங்கள் தரையிறங்குவதற்கும், புறப்பட்டு செல்வதற்கும் வசதியாக சோழவரத்தில் விமான ஓடுதளம் அமைக்கப்பட்டது. இதற்காக ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் செங்குன்றத்தில் இருந்து எடப்பாளையம் நோக்கி செல்லும் வழியில் 350 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

போர் முடிந்த பின்னர் சோழவரம் விமான ஓடுதளம் இந்திய விமானப்படை விமானங்கள் இயக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. அந்த பகுதி முழுவதும் இந்திய விமானப்படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் 1950-ம் ஆண்டுக்கு பின்னர் அங்கு விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சோழவரம் விமான ஓடுதளத்தை சுற்றியுள்ள பகுதிகள் சிக்கியது. தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகள் தோன்றின. பல நகர்களும், தெருக்களும் உருவாகின. ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் 20 ஏக்கர் நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்தன. அரசாங்கமும் 150 ஏக்கர் நிலங்களுக்கு பட்டா வழங்கியது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தநிலையில் பயன்பாட்டில் இல்லாத சோழவரம் விமான ஓடுதளத்தை மீட்டெடுத்து, அங்கு உள்நாட்டு விமான சேவையை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளலாம் என்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் உதவியுடன் சோழவரம் விமான ஓடுதளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு இடங்களை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகளும், பாதுகாப்புத்துறையை சேர்ந்த அதிகாரிகளும் சோழவரம் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

அதிகாரி தகவல்

இதுதொடர்பாக இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

350 ஏக்கர் பரப்பளவில் இருந்த சோழவரம் விமான ஓடுதளம் அமைந்துள்ள பகுதி ஆக்கிரமிப்புகளால் 150 ஏக்கராக சுருங்கி விட்டது. தற்போது ரூ.225 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அரசாங்கம் பட்டா வழங்கிய 150 ஏக்கர் நிலத்தில், 75 ஏக்கர் நிலம் பயன்பாட்டில் உள்ளது. மீதம் உள்ள இடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. எனவே அந்த இடத்தை மீட்டு தரும்படி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி இருக்கிறோம்.

இந்திய விமான படைக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை அபகரித்து வீட்டுமனைகளாக மாற்றிய சம்பந்தப்பட்ட ரியஸ் எஸ்டேட் நிறுவனம் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் மீட்பு

23 இடங்களில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, 11 இடங்கள் எங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் ஆக்கிரமிப்புகள் அரங்கேறாமல் இருப்பதற்காக தனியார் பாதுகாவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஆங்காங்கே இந்திய விமானப்படை பிரிவுக்கு சொந்தமான இடம். அத்துமீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ஆக்கிரமிப்புகளும் விரைவில் மீட்கப்படும். அதன்பின்னர் சோழவரம் விமான ஓடுதளம் விமான சேவைக்கு ஏற்ற வகையில் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘உதான்’ விமான சேவை

சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர்களில் 2 முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. அண்ணா முனையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், காமராஜர் முனையத்தில் இருந்து உள்நாட்டிற்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. மும்பை உள்பட பெருநகரங்களில் 2 விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன.

சென்னையில் 2-வது விமானநிலையம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கான இடங்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. புதிய விமான நிலையம் கட்டி முடிக்க 10 ஆண்டுகள் ஆகும். எனவே சோழவரத்தில் சிறிய ரக விமானங்களையும், அரக்கோணத்தில் சரக்கு விமானங்களையும் இயக்குவதற்கு இந்திய விமான போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.

‘சாதாரண மனிதர்களும் விமானத்தில் பறக்கலாம்’ என்ற உன்னத நோக்கில் ‘உதான்’ எனப்படும் குறைந்த கட்டண விமான சேவையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. எனவே சோழவரம் விமான ஓடுதளத்தில் இருந்து ‘உதான்’ விமான சேவை தொடங்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த விமானத்தில் ஒரு மணி நேரத்தில் 500 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்ய ரூ.2 ஆயிரத்து 500 கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story