நாடாளுமன்ற தேர்தல்: வேட்பாளரை அறிவிக்கும் முன்பே காங்கிரசில் கோஷ்டி பூசல் வெடித்தது


நாடாளுமன்ற தேர்தல்: வேட்பாளரை அறிவிக்கும் முன்பே காங்கிரசில் கோஷ்டி பூசல் வெடித்தது
x
தினத்தந்தி 17 March 2019 3:00 AM IST (Updated: 17 March 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரை அறிவிக்கும் முன்பே கரூர் காங்கிரசில் கோஷ்டி பூசல் வெடித்தது.

கரூர்,

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கரூர், திருச்சி உள்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார்? என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன்பாபு உள்பட சிலர் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் மனு அளித்துள்ளனர். கரூரில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கோஷ்டி பூசல் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனை நீக்கிவிட்டு மாவட்ட தலைவராக சின்னசாமி நியமிக்கப்பட்டபின் பயங்கரமாகவே கோஷ்டி பூசல் வெடித்தது. இருப்பினும் பல இடங்களில் அதனை வெளிக்காட்டாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அந்த கோஷ்டி பூசல் மீண்டும் வெடித்துள்ளது.

ராகுலுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

கரூர் ஜவகர் பஜாரில் உள்ள ஒரு அரங்கில் பேங்க் சுப்பிரமணியனின் ஆதரவாளர்கள் நேற்று திடீரென ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, கரூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்த ராகுல்காந்திக்கு நன்றி தெரிவிப்பது மற்றும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனில் கரூரில் பேங்க் சுப்பிரமணியனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

அந்த கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் பேசியபோது, காங்கிரசின் கோட்டையாக விளங்கிய கரூரில் மக்கள் செல்வாக்கு சரிந்ததன் காரணமாகவே நமது வெற்றி நீண்ட நாட்களாக தள்ளிப்போய் கொண்டிருந்தது என்று தெரிவித்தனர்.

வீணடிக்க கூடாது

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் மற்றொரு தரப்பை சேர்ந்த மாநில விவசாய அணி செயலாளர் ஜெயப்பிரகாஷ் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “கரூர் தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணியை தேர்வு செய்யக்கூடாது. கடந்த கால நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் அவர் தோல்வியையே தழுவினார். அதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் ஒரு சீட்டை வீணடித்து விடக்கூடாது” என்றார்.

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களோ, ஜோதிமணி இளம்வயதில் இருந்தே 18 ஆண்டுகளாக எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைக்கிறார். அவரால் மட்டுமே மக்களின் நன்மதிப்பினை பெற முடியும். அதனால் கரூர் தொகுதியில் அவர் போட்டியிட்டாலே நல்லது என்று தெரிவித்து வருகின்றனர்.

போர்க்கொடி

காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை (திங்கட் கிழமை) வெளியாகலாம் என தெரிகிறது. இந்த நிலையில் வேட்பாளரை அறிவிக்கும் முன்பே கரூர் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் கரூர் காங்கிரசில் கோஷ்டி பூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கோஷ்டி பூசலை கண்டு தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Next Story