கோவில் திருவிழாவுக்கு வந்த யானையை லாரியில் இருந்து இறக்கிய போது தவறி விழுந்தது 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு


கோவில் திருவிழாவுக்கு வந்த யானையை லாரியில் இருந்து இறக்கிய போது தவறி விழுந்தது 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
x
தினத்தந்தி 17 March 2019 4:00 AM IST (Updated: 17 March 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

கோவில் திருவிழாவுக்கு வந்த யானையை லாரியில் இருந்து இறக்கிய போது தவறி விழுந்தது. 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை பத்திரமாக மீட்டனர்.

பொள்ளாச்சி,

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சக்தி நகரை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் குலாபி என்ற பெண் யானையை வளர்த்து வருகின்றார். இந்த யானைக்கு 56 வயதாகிறது. பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் கஜபூஜையில் கலந்துகொள்ள இந்த யானையை லாரியில் அழைத்து வந்தனர். யானையுடன் பாகன் அக்பர் அலி, உதவியாளர் கிருபா ஆகியோர் வந்தனர். பின்னர் மகாலிங்கபுரத்தில் கயிறு வாரியம் எதிரே இருந்த மண் மேட்டில் யானையை இறக்க முடிவு செய்தனர். அதன்படி லாரியின் பின்புற கதவை திறந்து மணல் மீது வைத்தனர். பின்னர் யானை பாகனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு லாரியில் இருந்து யானை இறங்கியது. அப்போது மணல் சரிந்ததால் யானை கால் தவறி கீழே விழுந்தது. இதனால் பதறிபோன பாகன் மற்றும் உதவியாளர்கள் யானையை எழுந்திருக்க வைக்க முயற்சி செய்தனர். யானைக்கு வயதாகி விட்டதால், எழுந்திருக்க முடியவில்லை.

2 மணி நேர போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர். பின்னர் யானையை சுற்றி இருந்த மணலை மண்வெட்டியால் வெட்டி அப்புறப்படுத்தினர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் யானையின் மீது தண்ணீரை ஊற்றினார்கள்.

பயத்தால் கலக்கமடைந்த யானைக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்தனர். யானையை சிலர் ஒன்று சேர்ந்து ஒருபுறம் தூக்கினார்கள். யானையை அசைக்க கூட முடியவில்லை. பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. யானையின் கழுத்து வழியாக பெல்ட்டும், பின்புற உடலில் ஒரு பெல்ட்டும் அணிவிக்கப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் யானையை மெதுவாக தூக்கினார்கள். யானை மெதுவாக எழுந்திருக்க முயற்சி செய்தது. அப்போது பொதுமக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால் யானை கீழே விழுந்ததில் காலில் அடிபட்டதால் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.

பொக்லைன் எந்திரம் மூலம் யானை சிறிது நேரம் தாங்கி பிடிக்கப்பட்டது. யானை நின்றதும், அதன் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. அதன்பிறகு யானை சகஜ நிலைக்கு திரும்பியது.

11 மணிக்கு விழுந்த யானை, 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 1 மணிக்கு பத்திரமாக மீட்கப்பட்டது. யானையை அருகில் உள்ள மரத்தடி நிழலுக்கு அழைத்து சென்றனர்.

Next Story