நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க - தி.மு.க. 9 தொகுதிகளில் நேரடியாக மோத வாய்ப்பு
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க - தி.மு.க. 9 தொகுதிகளில் நேரடியாக மோத வாய்ப்பு இருக்கிறது.
சென்னை,
அரசியல் கட்சிகள் பரபரப்பாக எதிர்பார்க்கும் நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை சந்திக்க மெகா கூட்டணிகளை இரு துருவங்களாக இருக்கும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அமைத்துள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க. 7 கட்சிகளுடனும், தி.மு.க. 8 கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளன.
தி.மு.க. கூட்டணியில் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டன. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் நேற்று தொகுதிகள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென வெளியாகாமல் போனது. இதற்கிடையே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அமைச்சர்களுடன் சென்று சந்தித்தார். பின்னர், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கும் வந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்தினார்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
இதனால், அ.தி.மு.க - தே.மு.தி.க. இடையே தொகுதிகளை அடையாளம் காண்பதில் ஏதும் சிக்கல் ஏற்பட்டு விட்டதோ என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில், தே.மு.தி.க. தரப்பில் இருந்தும் சில ரகசிய தகவல்கள் கசிந்தன. நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற இடைத்தேர்தலையும் புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள அ.தி.மு.க. முதலில் இருந்தே ‘மாஸ்டர் பிளான்’ போட்டு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் முடிந்த வரை தி.மு.க.வுடன் நேரடி மோதலில் ஈடுபடக்கூடாது என்று அ.தி.மு.க. முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது, தி.மு.க. போட்டியிடும் 20 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அ.தி.மு.க.வும் 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அந்த கூட்டணியின் தொகுதிகள் பட்டியலும் வெளியாக தயாராக இருக்கின்றன.
9 தொகுதிகளில் நேரடி மோதல்
அ.தி.மு.க - தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை பார்க்கும்போது, தென்சென்னை, காஞ்சீபுரம் (தனி), திருவண்ணாமலை, சேலம், நீலகிரி (தனி), பொள்ளாச்சி, திண்டுக்கல், மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய 9 தொகுதிகளில் இரு கட்சிகளும் நேரடியாக மோத வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதையும் குறைக்க முடியுமா? என்று அ.தி.மு.க. பார்க்கிறது.
அந்த வகையில் தான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று சந்தித்தார் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. தரப்பு வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிகிறது. ஆனால், இப்போது தே.மு.தி.க.விடம் இருந்து திருச்சி தொகுதியை அ.தி.மு.க. கேட்கிறது. அப்படி என்றால், திருச்சி தொகுதிக்கு பதில் கிருஷ்ணகிரி தொகுதியை தாருங்கள் என்று தே.மு.தி.க. தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அ.தி.மு.க. மறுத்துவிட்டது. இதனால் தான், அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
தொகுதிகள் பட்டியல் எப்போது?
தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வைவிட காங்கிரஸ் கட்சியை எதிர்கொள்வது எளிது என்று கருதுவதால்தான் அ.தி.மு.க. அந்த தொகுதியை தே.மு.தி.க.விடம் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், தே.மு.தி.க.வோ பா.ம.க.விடம் வழங்கப்படும் கிருஷ்ணகிரி தொகுதியை கேட்டு ‘செக்’ வைத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் 2 நாட்களே (19-ந் தேதி) உள்ள நிலையில், அதற்கு முன்பாக அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் பட்டியலை வெளியிட்டால் தான், அ.தி.மு.க.வும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்க முடியும் என்பதால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க. தலைமை தொகுதிகள் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story