சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்சி கலைக்கப்பட்டு விட்டது: இப்போது இருப்பது ஊழல் நிறைந்த காங்கிரஸ் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு


சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்சி கலைக்கப்பட்டு விட்டது: இப்போது இருப்பது ஊழல் நிறைந்த காங்கிரஸ் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 March 2019 4:45 AM IST (Updated: 17 March 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் கலைக்கப்பட்டு விட்டது என்றும், இப்போது ஊழல் நிறைந்த காங்கிரஸ் தான் இருக்கிறது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னை, 

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராகுல்காந்தியை விமர்சிக்க எனக்கு தகுதி உள்ளதா? என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டு இருக்கிறார். நேரு குடும்ப வாரிசு என்ற ஒரே தகுதியை கொண்டதால் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

யாரிடமும் சிபாரிசு கோராமல் அரசியலை சுயபுத்தியுடன் பகுத்தாய்ந்து பாதை வகுத்து சொந்தக்காலில் நின்று அடிமட்ட தொண்டராய், உழைப்பால் தலைவராக படிப்படியாக உயர்ந்த எனக்கு இந்திய குடிமகள், தமிழ்நாட்டு பிரஜை என்ற முறையில் எல்லா தகுதிகளும் உண்டென்பதை உங்களுக்கு புரியாவிட்டாலும் மக்களுக்கு நன்றாக புரியும்.

ஊழல் நிறைந்த காங்கிரஸ்

காமராஜரை புகழ பா.ஜ.க.விற்கு என்ன உரிமை எனக்கேட்கும் உங்களுக்கு, காமராஜர் காலத்திலேயே அவரை கைவிட்டுவிட்டு இந்திரா காங்கிரசுக்கு ஓடிப்போன கோஷ்டியிலிருந்து வந்ததே தகுதி என தலைவரான உங்களுக்கே காமராஜரை பற்றி பேச தகுதி இருக்கிறது என நீங்கள் நினைக்கும் போது, தேசிய குடும்பத்தில் பிறந்து, தேசிய கட்சியில் பணியாற்றும் எனக்கு எல்லா தகுதியும் உள்ளது.

காமராஜர் பெயரை சொல்லி எத்தனை நாளுக்கு அரசியல் செய்ய போகிறீர்கள்? என சத்தியமூர்த்தி பவனில் கார்த்தி சிதம்பரம் பேசினார். அப்போது உங்களுக்கு வராத கோபம், நாங்கள் காமராஜர் புகழ்பாடும் போது மட்டும் வருவது ஏன்?

காமராஜரை தோற்கடித்த தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் நீங்கள், அவரை பற்றி பேசலாமா? நீங்கள் கூறும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் கலைக்கப்பட்டு விட்டது. இப்போது இருப்பது ஊழல் நிறைந்த காங்கிரஸ்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story