“புறப்பட்டு விட்டால் புயலெனப் புரிய வைப்போம்” மைத்ரேயன் முகநூலில் பதிவு


“புறப்பட்டு விட்டால் புயலெனப் புரிய வைப்போம்”  மைத்ரேயன் முகநூலில் பதிவு
x
தினத்தந்தி 18 March 2019 5:04 PM GMT (Updated: 2019-03-18T22:34:24+05:30)

‘புறப்பட்டு விட்டால் புயலெனப் புரிய வைப்போம்’ என்ற கவிதை வரிகளை அதிமுக எம்பி மைத்ரேயன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு அணிகளாக செயல்பட்ட போது, ஓபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்பட்டவர் மைத்ரேயன். இரு அணிகள் இணைந்த பின்னர், அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை என்று அவர் தனது முகநூலில் கருத்து ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதாவது, ஓபிஎஸ் அணியில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்று அவர் மறைமுகமாக கூறியிருந்தார். அதற்கேற்றார்போல், அன்றைய நிலையும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே முழுவதும் சமரசம் ஏற்படவில்லை என்பதுபோல் தான் இருந்தது. தொடர்ந்து மைத்ரேயன் ஒதுங்கிய நிலையிலேயே இருந்தார்.

இந்த நிலையில்தான், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குழுக்களில் தான் இடம்பெறாதது தொடர்பாக எம்.பி மைத்ரேயன் சமீபத்தில் வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் 2019 விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள கழகம் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரப் பணிகளை முறைப்படுத்தும் குழு என்று மூன்று குழுக்களை கடந்த 23/01/2019 அன்று அறிவித்துள்ளது. மூன்று குழுக்களிலும் நான் இடம் பெறவில்லை.

ஒருவரை குழுவில் சேர்ப்பதும், சேர்க்காதிருப்பதும் கட்சித் தலைமையின் விருப்பம், உரிமை. கழகத்தில் நான் 1999ல் இணைந்த பிறகு நடைபெற்ற 2001, 2006, 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் 2004, 2009, 2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்கள் அனைத்திலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிலும் 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்னை சேர்த்து இருந்தார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில்,   அதிமுக எம்பி மைத்ரேயன் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில்,

இன்று வீட்டில் அம்பாரமாக குவிந்துள்ள புத்தகங்கள், பத்திரிகை குறிப்புகளை சரி செய்து அடுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பழைய இதழில் கவிஞர் மு.மேத்தா அவர்களின் கவிதை வரிகளைப் படிக்க நேர்ந்தது. 

என் கால்களில் சற்று வலி ஏற்படும் போது நான் சிறிது இளைப்பாறுகிறேன்.நான் இளைப்பாறுவது ஓய்வெடுப்பதற்குத் தானே ஒழிய ஓய்ந்து போவதற்கு அல்ல.

காத்திருக்கும் வரை நம் பெயர் காற்று என்றே இருக்கட்டும். புறப்பட்டு விட்டால் புயலெனப் புரிய வைப்போம்.எவ்வளவு பொருள் பொதிந்த யதார்த்தமான வரிகள் !

Next Story