அ.தி.மு.க. கூட்டணியில் தஞ்சை தொகுதி த.மா.கா. வேட்பாளர் நடராஜன்


அ.தி.மு.க. கூட்டணியில் தஞ்சை தொகுதி த.மா.கா. வேட்பாளர் நடராஜன்
x
தினத்தந்தி 19 March 2019 3:45 AM IST (Updated: 19 March 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கூட்டணியில் தஞ்சை தொகுதி த.மா.கா. வேட்பாளராக என்.ஆர்.நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா.வுக்கு தஞ்சை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் த.மா.கா. செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அறிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் என்ஜினீயர் ஆவார். இந்த தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம். தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் நான் பிரசாரம் மேற்கொள்வேன். ‘வளமான தமிழகம், வலிமையான பாரதம்’ என்ற தலைப்பில் விரைவில் த.மா.கா. தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு மூத்த துணை தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்பட நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

த.மா.கா. தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்று ஜி.கே.வாசன் அறிவித்த சில நிமிடத்தில் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிப்பு வெளியானது.

Next Story