தூத்துக்குடி தொகுதியில் இருந்து 22-ந்தேதி பிரசாரம் தொடங்குகிறேன் வைகோ பேட்டி


தூத்துக்குடி தொகுதியில் இருந்து 22-ந்தேதி பிரசாரம் தொடங்குகிறேன் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 19 March 2019 4:30 AM IST (Updated: 19 March 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தொகுதியில் இருந்து தேர்தல் பிரசாரத்தை 22-ந்தேதி தொடங்க இருப்பதாகவும், அந்த தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி எம்.பி. வெற்றி பெறுவார் என்றும் வைகோ தெரிவித்தார்.

சென்னை, 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லி மேல் சபை உறுப்பினராக இருக்கும் கனிமொழி முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் களம் காண்கிறார்.

இந்தநிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று கனிமொழி எம்.பி. சந்தித்து, வாழ்த்து பெற்றார்.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தூத்துக்குடி தொகுதியில் உங்களை எதிர்த்து மு.க.அழகிரி மகன் போட்டியிடப்போவதாக சமூக வலைதளங்களில் செய்தி வருகிறதே?.

பதில்:- இது உங்களின் கற்பனையாகவும், ஆசையாகவும் இருக்கலாம். எனக்கு தெரிந்து அது உண்மை இல்லை.

கேள்வி:- தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?

பதில்:- தி.மு.க. என்ற இயக்கத்தில் இயங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு தான் வாய்ப்பு அளிக்கப்படுகிறதே தவிர வெளியில் இருந்து யாரையும் கொண்டுவந்து வாய்ப்பு வழங்கவில்லை.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய அரசியலில் நாடாளுமன்ற தேர்தல் திருப்புமுனையாக அமையும். 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். முல்லைப்பெரியாறு, காவிரி நதிநீர் விவகாரத்திலும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதி அளித்ததிலும் மோடி அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இந்துத்துவா சக்திகளின் பிரதிநிதித்துவமாக இருக்கும் பா.ஜனதா தலைமையிலான அணி வெற்றிபெறாது, வெற்றிபெறக்கூடாது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து, தி.மு.க.வுக்கு பெருமை சேர்த்த கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில், 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவார். நான் எனது பிரசாரத்தை 22-ந்தேதி தூத்துக்குடி தொகுதியில் இருந்து தான் தொடங்குகிறேன்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழகம் எங்கும் அவருடைய பிரசார பயணம் மகத்தான வெற்றியை இந்த அணிக்கு குவிக்க இருக்கிறது. நானும் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய விரும்புகிறேன். அதைத்தான் மு.க.ஸ்டாலினும் விரும்பினார்.

எங்களது தேர்தல் அறிக்கை 20-ந்தேதி (நாளை) வெளியிடப்படும். 22-ந்தேதி முதல் ஏப்ரல் 16-ந்தேதி மாலை 4 மணி வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தயாநிதி மாறனும் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Next Story