பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்


பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏப்ரல் 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
x
தினத்தந்தி 18 March 2019 11:30 PM GMT (Updated: 18 March 2019 9:08 PM GMT)

பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் அடுத்த மாதம்(ஏப்ரல்) 1-ந்தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை, 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ். எல்.வி. வகை ராக்கெட்டுகளை தயாரித்து, அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்வெளிக்கு வெற்றிகரமாக ஏவி வருகிறது. அந்தவகையில் தற்போது இஸ்ரோ தயாரித்துள்ள பி.எஸ்.எல்.வி. சி-45 ராக் கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இந்த ராக்கெட் முதன் முறையாக வெவ்வேறு புவிவட்டப்பாதையில் செயற்கைகோள்களை நிலை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ராக்கெட்டில் மின்னணு நுண்ணறிவு செயற்கைகோளான ‘எமிசாட்’ உடன் 28 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் ஏவப்படுகிறது.

சிறப்பம்சம் என்ன?

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஒரு சிறப்பு மிக்கதாகும். காரணம் வழக்கமாக ஒரே ஒரு புவிவட்டப்பாதையில் தான் செயற்கைகோள்களை ராக்கெட்டுகள் நிலை நிறுத்துவது வழக்கம். ஆனால் இந்த ராக்கெட் வெவ்வேறு வகையான 3 புவிவட்டப்பாதையில் செயற்கைகோள்களை நிலை நிறுத்த இருக்கிறது.

இதில் ‘எமிசாட்’ என்ற மின்னணு நுண்ணறிவு செயற்கைகோள் 780 கிலோ மீட்டரில் புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. தொடர்ந்து 28 விருந்தினர் செயற்கைகோள்கள் 504 கி.மீ தூரத்தில் மற்றொரு புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. அதன் பிறகு ராக்கெட்டின் 4-வது நிலையில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின் உதவியுடன் 485 கி.மீ தூரத்தில் விஞ்ஞானி பரிசோதனைக்காக மற்றொரு புவிவட்டப்பாதையில் சில செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்பட உள்ளன.

வளர்ச்சி அதிகரிக்கும்

இதனை 21-ந்தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பணி மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம்(ஏப்ரல்) 1-ந்தேதி இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்து உள்ளோம். இதனை தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்புக்காக கார்டோசாட்-3 செயற்கைக்கோளும், பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டில் ரேடார் பயன்பாட்டுக்காக ‘ரீசாட் 2பிஆர்’ செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்பட உள்ளன.

இதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. விண்வெளியில் இஸ்ரோவின் சாதனைகள் தொடரும். இதன் மூலம் நாட்டில் அறிவியல் ரீதியான வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story