நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியா? கமல்ஹாசன் பதில்
நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியா? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியோடு நல்லவர்கள் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இந்தநிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய இந்திய குடியரசு கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சியோடு இணைந்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் நேற்று சந்தித்து பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு இந்திய குடியரசு கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதியும், 3 சட்டமன்ற தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
3-வது அணிக்கான வாய்ப்பை இந்திய மக்கள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள். அது எங்கள் முனைப்பும் கூட. அதை நோக்கி தான் சென்றுகொண்டிருக்கிறோம். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை எங்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளேன். அவர் முதல்-மந்திரி என்பதால் நேரம் கிடைக்கும்போது வருவார். கட்சியில் இருந்து விலகிய முன்னாள் செயற்குழு உறுப்பினர் குமரவேல் என் மீது குற்றச்சாட்டினை வைக்கவில்லை. வைத்தால் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.
கட்சி கட்டுப்பாட்டுக்குள் இயங்காதவர்கள் மீது என்ன செய்யவேண்டுமோ, அதனை கட்சி செய்துவிட்டது. நேர்காணலில் கலந்துகொள்வதற்கு முன்னதாகவே தான் வேட்பாளர் என்று தகவலை வெளியிட்டது தான் தவறு. பிரபலங்களும், பிரபலங்களாக உள்ளவர்களும் எங்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையாக கொடுத்த வாக்குறுதிகள் 50 வருடமாக சொல்லிக்கொண்டிருப்பது தான். அதன் தொடர்ச்சியாக தற்போதும் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களின் கூட்டணி எவ்வளவு முரண்பாடானதோ அதேபோல் தான் அவர்களின் தேர்தல் அறிக்கையும். விரைவில் எங்கள் தேர்தல் அறிக்கை வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறீர்களா? என்ற கேள்விக்கு, ‘உங்களின் ஆசைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி’ என்று கமல்ஹாசன் பதில் அளித்தார்.
முன்னதாக செ.கு.தமிழரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் உடன் கூட்டணி வைத்துள்ளோம். நாடாளுமன்றத்தில் ஒரு தொகுதியும், சட்டமன்றத்தில் 3 தொகுதிகளும் எங்களுக்கு வழங்கியுள்ளார்கள். கமல்ஹாசன் கட்சியின் சின்னம் கிராமங்களுக்கும் பரவியிருக்கிறது. நாங்களும் அதே சின்னத்தில் போட்டியிடுகிறோம். தமிழக மக்களின் நலன், உரிமை ஆகியவற்றில் மாற்று அரசியலை கமல்ஹாசன் முன்னெடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று (புதன்கிழமை) வெளியாக உள்ளது. இதையடுத்து 24-ந் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.
Related Tags :
Next Story