மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார் + "||" + Edappadi Palanisamy Salem Propaganda,Stalin collected votes in Tiruvarur

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரசாரம்; மு.க.ஸ்டாலின் திருவாரூரில் வாக்கு சேகரித்தார்
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.
சென்னை, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலும், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் களம் சூடு பிடிக்கிறது

இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் அறிமுக கூட்டம் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சேலம் நெய்காரப்பட்டியில் நேற்று நடந்தது. இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த கட்சி அ.தி.மு.க. அவர்கள் ஆட்சியையும், கட்சியையும் நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நாம் முதல் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும். ஒரு மெகா கூட்டணியை அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றோம். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே திரும்பி பார்க்கின்ற பலமான கூட்டணியாக அமைந்திருக்கின்றது.

வலிமையான பாரதம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக சேலம் முத்திரை பதிக்க வேண்டும்.

130 கோடி மக்களை கொண்ட இந்தியாவை பாதுகாப்பதற்கு தகுதியான ஒரே பிரதமர் மோடி தான். அவரது தலைமையில் வலிமையான பாரதம் அமைய வேண்டும் என்பதற்காகவே கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். மோடியின் ஆட்சி 5 ஆண்டுகள் சிறப்பாக நடந்துள்ளது. மத்தியில் வலிமையான, நிலையான ஆட்சியை பிரதமர் மோடியால் தான் தர முடியும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி வெற்றி பெற வேண்டும். ஒருமித்த கருத்துள்ள கூட்டணி வெற்றி பெற்றால் தான், மாநிலத்திற்கு தேவையான நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். தமிழகம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் செல்லும்.

பொய் பிரசாரம்

கடந்த காலங்களில் பா.ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. அப்போது, அவர்களுக்கு பா.ஜனதா மதவாத கட்சி என்று தெரியவில்லையா? ஆனால் இப்போது, பா.ஜனதா மதவாத கட்சி என்று பொய் பிரசாரம் செய்கிறார்கள். அதிகாரம், பதவிக்காக அவர்கள் கூட்டணி வைக்கிறார்கள். மக்களின் நலனுக்காக கிடையாது.

1999-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் மத்தியில் தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகித்தது. ஆனால் தமிழக மக்களுக்கு தி.மு.க. என்ன திட்டங்களை கொண்டு வந்தது?.

மு.க.ஸ்டாலின் மீது அவரது தந்தை கருணாநிதிக்கே நம்பிக்கை கிடையாது. ஏனென்றால் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 ஆண்டுகளாக மு.க.ஸ்டாலின், தி.மு.க.வின் செயல் தலைவராகவே இருந்தார். மு.க.ஸ்டாலினுக்கு தலைவராக ஏன் பொறுப்பு வழங்கவில்லை?. மகன் மீது அவரது தந்தைக்கு நம்பிக்கை இல்லை.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம்

அ.தி.மு.க. ஆட்சியையும், கட்சியையும் சீர்குலைக்க வேண்டும் என்று ஒரு கும்பல் சுற்றி வருகிறது. அவர்களை நம்பி துரோகம் செய்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோனது. சுயநலவாதிகளின் சதியால் இன்றைக்கு 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அந்த துரோகிகளுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் என்பது கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒரே குறிக்கோள். அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு 200 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். இதனை நிறைவேற்ற முழுவீச்சில் பாடுபடுவோம். தமிழகத்தில் நீர் மேலாண்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடலில் வீணாக கலக்கிற தண்ணீரை சேமிக்க ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்படும். இதன்மூலம் தண்ணீர் சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை காலை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீசை ஆதரித்தும், பின்னர் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசை ஆதரித்தும் பிரசாரம் செய்கிறார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று தேனி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தனது மகன் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மஞ்சமலை சுவாமி கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தை தொடங்கிய அவர் அலங்காநல்லூர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூர் சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் செல்வராசு ஆகியோரை ஆதரித்து திருவாரூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, கூட்டணி கட்சி தலைவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்யும் வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்படும் என்று அறிவித்தார்.

மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

டாக்டர் ராமதாஸ்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று விழுப்புரத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு வேட்பாளர் வடிவேல் ராவணனை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.