அ.தி.மு.க-தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்து கமல்ஹாசன் விமர்சனம்


அ.தி.மு.க-தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்து கமல்ஹாசன் விமர்சனம்
x
தினத்தந்தி 21 March 2019 4:30 AM IST (Updated: 21 March 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

“நான் சிறுவனாக இருந்த போது அளித்த அதே வாக்குறுதிகளை மீண்டும் தருகிறார்கள்” என்று அ.தி.மு.க., தி.மு.க. தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் விமர்சித்து கருத்து தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டு, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் நீதி மய்யத்தின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வருகிற 24-ந் தேதி கோவையில் அறிவிக்கப்படும். அத்துடன் வேட்பாளர்கள் பட்டியல் முழுமை பெறும். அன்றைய தினம் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும். தேர்தல் அறிக்கையில் பல பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

முக்கியமாக ஆதார, அத்தியாவசிய தேவைகளுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொடங்கி கல்வி, மருத்துவ வசதி உள்பட மக்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அதில் அடங்கும்.

தேர்தல் வாக்குறுதிகள்

நான் சிறுவனாக இருந்தபோது அளித்த அதே வாக்குறுதிகளைத்தான் இப்போதும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தருகின்றன. இந்த வாக்குறுதிகள் அப்போது என்னை கவர்ந்தவைதான். ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான் முக்கியம். அதை மக்கள் நீதி மய்யம் செய்யும்.

எங்கள் கட்சி சார்பில் நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்ய கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், ஒரு தேசிய கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய பலம் எங்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காக தேர்தலில் பங்கேற்கிறோம். தேர்தலில் போட்டியிட பயப்படும் காலத்தை தாண்டிவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியா?

“அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களே?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கமல்ஹாசன், “முன்பு சூரியன் உதிக்கும் இடம் என்று சொல்வார்கள். இப்போது ‘ sun ’ (சூரியன்) என்ற வார்த்தையை ‘ son ’(பிள்ளைகள்) என்று எடுத்துக்கொண்டு விட்டார்கள்” என்று பதில் அளித்தார்.

“ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா?” என்று கேட்டதற்கு, “இந்த கேள்விக்கு உங்களுக்கு 24-ந் தேதி பதில் கிடைக்கும்’ என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

Next Story