மாநில செய்திகள்

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின் + "||" + Tamilachi thangapandian The vote was collected by Udhayanidhi Stalin

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின்

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின்
தென்சென்னை தொகுதி தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். இந்தநிலையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை தொகுதி தேர்தல் அலுவலகத்தை, சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில், உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாளை முதல் தமிழகம் முழுவதும் 25 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். அதற்கு தொடக்கமாக இன்றைய(நேற்று) நிகழ்ச்சி அமைந்தது.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனும், எங்கள் குடும்பத்தினருடனும் 3 தலைமுறையாக கொண்டுள்ள நட்பு தமிழச்சி தங்கபாண்டியனுக்கு தேர்தலில் வெற்றியை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன். தி.மு.க. மீது கொள்கை பிடிப்பு கொண்ட ஒரு அழகான வேட்பாளரை உங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தவறிவிடாதீர்கள். விரைவில் மத்திய மோடி ஆட்சியையும், மாநில எடப்பாடி பழனிசாமி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப உதயசூரியன் சின்னத்தை ஆதரிப்பீர்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாக்கு சேகரிப்பு

பின்னர் தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக் காக சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இதில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, “நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதேபோன்று, 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஒரு ஆட்சி மாற்றம் வரும் என்ற நம்பிக்கை தி.மு.க.வினருக்கு மட்டும் அல்ல பொதுமக்களிடமும் அந்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. தி.மு.க. வெற்றியின் கதாநாயகனாக தேர்தல் அறிக்கையும், தலைவர் மு.க.ஸ்டாலினும் இருப்பார்கள். வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக தி.மு.க. வேட்பாளர் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. அவர்களின் கடின உழைப்பு, கட்சி போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை மனதில் கொண்டு தான் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். பா.ஜனதா தலைவர்கள் பெயருக்கு முன்னால் ‘சவுகிதார்’ என்ற அடைமொழியை போட்டுக் கொண்டால் மட்டும் போதாது அதற்கு தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.

அறிமுகம் நிகழ்ச்சி

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அடையாறில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அவருக்கு மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.