நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார்


நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார்
x
தினத்தந்தி 21 March 2019 3:30 AM IST (Updated: 21 March 2019 3:59 PM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவது மற்றும் தமிழகம் நலன் சார்ந்த திட்டங்களுடன் ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வைகோ வெளியிட்டார்.

சென்னை, 

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள ம.தி.மு.க. தலைமை நிலையமான தாயகத்தில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கை குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துவோம். மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கும் ‘நிதி ஆயோக்’ அமைப்பை கலைக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி அமைத்து, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பு அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முனைப்புடன் செயலாற்றுவோம்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டங்களை கைவிட்டு, காவிரிப்பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க குரல் கொடுப்போம். முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட மத்திய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் ஆய்வு அனுமதியை உடனடியாக ரத்து செய்ய ம.தி.மு.க. வழிவகை செய்யும்.

திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து பிரித்து நெல்லையை மையமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் அமைக்க வலியுறுத்துவோம். மதுரை-தூத்துக்குடி-கன்னியாகுமரி பாதையில் இரட்டை ரெயில் பாதையை விரைவாக அமைக்க குரல் கொடுப்போம். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதுடன், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க கடுமையாக எதிர்ப்போம்.

கூடங்குளம் அணு உலை விரிவாக்க திட்டத்தை முழுமையாக கைவிடவும், இதனை எதிர்த்து போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறவும் பாடுபடுவோம். தேசிய மருத்துவ ஆணைய அவசர சட்டத்தையும், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவையும் திரும்பப்பெற வேண்டும் என்று குரல் கொடுப்போம். பொது சிவில் சட்டம் கூடாது என்பதுடன், இலங்கை அரசின் கடற்தொழில் சட்டத்திருத்தம் செய்வதுடன், தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் உரிமையைப் பாதுகாக்க பாடுபடுவோம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3 சதவீதம் வழங்க தொடர்ந்து வலியுறுத்துவோம். சேலம்- சென்னை எட்டுவழி பசுமை சாலை திட்டத்தை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம். இந்திய சுற்றுலா வரைபடத்தில் குற்றாலத்தின் பெயர் இடம் பெற வழிவகை செய்வோம்.

பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இடங்களை அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவோம். சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை, கோவையில் ஐகோர்ட்டு கிளை, நீதிபதிகள் தேர்வு ஆணையம் அமைக்கவும் வலியுறுத்துவோம். விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம், தமிழ் ஈழம் மலர, பொது வாக்கெடுப்பு நடத்துவது, 7 தமிழர்கள் விடுதலைக்கு குரல் கொடுப்போம்.

தி.மு.க. தேர்தல் அறிக்கை சிறப்புற அமைந்திட வழிகாட்டிய மு.க.ஸ்டாலினுக்கும், அறிக்கையை தயாரித்த குழுவுக்கும் பாராட்டு தெரிவித்துகொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story