உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை


உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை
x
தினத்தந்தி 20 March 2019 7:52 PM GMT (Updated: 2019-03-21T16:01:22+05:30)

உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரம், 

தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி (தனி) பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று காலை விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு விழுப்புரம் தொகுதி வேட்பாளர் வடிவேல் ராவணனை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-

தி.மு.க.வை பற்றி நிறைய சொல்லலாம். மதுக்கடைகளை திறந்தார்கள். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தார்கள். காவிரி நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் போனதன் விளைவு இன்றும் அனுபவித்து வருகிறோம். நாம் அவர்களோடு சேரவில்லை என்ற ஆதங்கம், எரிச்சல் அவர்களுக்கு இருக்கிறது. சேர வேண்டிய இடத்தில் நாம் சேர்ந்து இருக்கிறோம்.

பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும். மக்கள் எந்த நிலையிலும் முகம் சுழிக்காதவாறு நல்லதொரு ஆட்சியை அ.தி.மு.க.வினர் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

அதனால்தான் தமிழகம், புதுச்சேரியில் சேர்த்து 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற போகிறோம். மீண்டும் நம்முடைய மோடி பிரதமராக வரப்போகிறார். கருத்துக்கணிப்பும் அப்படித்தான் சொல்கிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக தமிழக அரசு, அமைச்சரவை கூட்டத்தை நடத்தி கவர்னருக்கு ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த தேர்தலுக்கு பிறகு நிச்சயமாக 7 பேரும் விடுதலை ஆவார்கள் என்று நம்புகிறேன்.

இப்போது இந்த தேர்தலில் மாநிலத்தின் சுயாட்சியை பெற்றுத்தருவோம் என்று (அ.தி.மு.க., பா.ம.க.) நாங்கள் இருவரும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம்.

இந்த கூட்டணி அமைந்ததற்கு தம்பி சி.வி.சண்முகமும் காரணம். உள்ளாட்சி தேர்தல் ஜூன், ஜூலையில் வந்தே தீரும். அந்த தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story