சாதிக் பாட்சாவின் மனைவி கார் மீது தாக்குதல் பாதுகாப்பு கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் மனு


சாதிக் பாட்சாவின் மனைவி கார் மீது தாக்குதல் பாதுகாப்பு கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 21 March 2019 3:00 AM IST (Updated: 21 March 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

2 ஜி வழக்கில் சிக்கி தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சாவின் மனைவி ரேகா பானுவின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

சென்னை, 

2 ஜி வழக்கில் சிக்கி தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சாவின் மனைவி ரேகா பானுவின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் பாதுகாப்பு கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் மனு கொடுத்தார்.

சாதிக் பாட்சா

சென்னை துரைப்பாக்கம் காமராஜர் சாலையில் வசிப்பவர் ரேகா பானு. இவர் 2ஜி வழக்கில் சிக்கி தற்கொலை செய்து கொண்ட தொழில் அதிபர் சாதிக் பாட்சாவின் மனைவி ஆவார். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் சாதிக் பாட்சா, ‘கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு 2ஜி வழக்கு விசாரணை நடந்து வந்தபோது, என் கணவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு பிறகு என்னையும், எனது குடும்பத்தினரையும் பலரும் அச்சுறுத்தி வந்தனர்.

கண்ணாடி சேதம்

நேற்று (நேற்று முன்தினம்) இரவு நானும், எனது தம்பியும் துரைப்பாக்கத்தில் இருந்து அசோக் நகருக்கு காரில் சென்றோம். துரைப்பாக்கம் சிக்னல் அருகே செல்லும்போது, காரை வழிமறித்து ஒரு கும்பல் தாக்கியது. இதில் கார் கண்ணாடி சேதம் அடைந்தது. பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடியது.

இதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் ரேகா பானு குறிப்பிட்டிருந்தார்.

கமிஷனர் உறுதி

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘போலீஸ் கமிஷனரை சந்தித்து எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன். போலீஸ் கமிஷனரும் உரிய பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்துள்ளார்’ என்று தெரிவித்தார்.

சாதிக் பாட்சாவின் 8-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி சமீபத்தில் பத்திரிகைகளில் நினைவு அஞ்சலி விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. அதில் கூடா நட்பு, கேடாய் முடியும் என்ற வாசகங்கள் காணப்பட்டன. அதனால்தான் சாதிக் பாட்சாவின் மனைவி கார்மீது தாக்குதல் சம்பவம் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Next Story