தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ பிரசாரம் தூத்துக்குடியில் நாளை தொடங்குகிறார்


தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ பிரசாரம் தூத்துக்குடியில் நாளை தொடங்குகிறார்
x
தினத்தந்தி 20 March 2019 9:00 PM GMT (Updated: 20 March 2019 8:18 PM GMT)

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடியில் நாளை வைகோ தொடங்குகிறார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வைகோ தலைமையிலான ம.தி.மு.க. அங்கம் வகிக்கிறது. தேர்தலில் அக்கட்சிக்கு ஈரோடு தொகுதியும், ஒரு மாநிலங்களவை ‘சீட்’டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஈரோடு தொகுதி ம.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் ஏ.கணேசமூர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் ‘பிரசார பீரங்கி’ என அழைக்கப்படும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாளை (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடியில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார். அதன் விவரம் வருமாறு:-

தூத்துக்குடி

மார்ச் 22-ந்தேதி ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர், தூத்துக்குடி, குறுக்குச்சாலை, குளத்தூர், விளாத்திகுளம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டம், 23-ந்தேதி தூத்துக்குடி தொகுதி (கோவில்பட்டி), விருதுநகர் தொகுதி (சாத்தூர், வெம்பக்கோட்டை), தென்காசி தொகுதி (ராஜபாளையம்) பொதுக்கூட்டம், 24-ந்தேதி தென்காசி தொகுதி (ஸ்ரீவில்லிபுத்தூர்), விருதுநகர் தொகுதி (கல்லுப்பட்டி, திருமங்கலம்), மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வைகோ பேசுகிறார்.

25-ந்தேதி நெல்லை தொகுதியிலும் (அம்பாசமுத்திரம், மேலப்பாளையம், பாளையங்கோட்டை), 26-ந்தேதி வேலூர், அரக்கோணம் தொகுதிகளிலும், 27-ந்தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை தொகுதிகளிலும், 28-ந்தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி தொகுதிகளிலும், 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ஈரோடு தொகுதியிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 1-ந்தேதி முதல் மீண்டும் தன் சுற்றுப்பயணத்தை வைகோ மேற்கொள்கிறார்.

Next Story