"ஸ்டாலின் தலைமை தான் சரியானது” தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன்
அ.ம.மு.க. கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன். ‘‘ஸ்டாலின் தலைமை தான் சரியானது’’- அதனால் தி.மு.க.வில் இணைந்தேன்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன். இவர் நேற்று மாலை அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இன்று அவர் தி.மு.க.வில் இணைந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினகரனுக்கும் ஸ்டாலினுக்கும் கடுமையான வார்த்தை போர் நடைபெற்றது. தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி, தினகரனை கடுமையாக விமர்சித்தது.
அப்போது முன்னாள் அமைச்சரும் அ.ம.மு.க.வின் கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்தார். அவர் தி.மு.க.வில் இணைந்ததுமே அவரைத் தொடர்ந்து அ.ம.மு.க.நிர்வாகிகள் பலரும் தி.மு.க.வில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது.
தி.மு.க.வும் அதற்கான வியூகங்களை வகுத்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து தேர்தல் அறிவிப்புகள் என்று பிசியாக இருந்ததால், நிர்வாகிகள் தாவல்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது.
சமீபத்தில் அ.ம.மு.க. ஆலோசனை கூட்டத்தில் பேசிய தினகரன், நமது மேடைகளில் தி,மு,க,வை கடுமையாக எதிர்க்க வேண்டும், அ,தி,மு,க, எதிர்ப்போடு தி,மு,க, எதிர்ப்பையும் கடுமையாக காட்ட வேண்டும் என பேசியிருந்தார். இந்நிலையில் அ.ம.மு.க.தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன் கடந்த ஒரு மாதமாகவே தினகரனுடன் கருத்து வேறுபாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
நேற்று திருவாரூர் பிரச்சாரத்திற்காக ஸ்டாலின் திருச்சிக்கு புறப்பட்டு சென்ற போது கலைராஜனும் திருச்சிக்கு சென்றார். அங்கு சங்கம் ஹோட்டலில் ஸ்டாலினை சந்தித்து பேசிய கலைராஜன் தி.மு.க.வில் சேர்வதற்கான இறுதி கட்ட பேச்சு வார்த்தையை நடத்தினார்.
இந்த நிலையில் இன்று காலை வி.பி.கலைராஜன், திருச்சியில் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார்.
இதுகுறித்து வி.பி.கலைராஜன் கூறும்போது, ஸ்டாலின் தலைமை தான் சரியானது, அதனால் தி.மு.க.வில் இணைந்தேன். தினகரனுடன் எனக்கு முரண்பாடு ஏதும் கிடையாது என கூறினார்.
Related Tags :
Next Story