தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மத்திய பா.ஜனதா தலைமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதாவுக்கு கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பிற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் பா.ஜனதா தரப்பில் அறிவிக்கப்படாமல் இருந்தது. பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சிவகங்கையில் தேசிய செயலாளர் எச்.ராஜா, ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக கூறினார்.
இப்போது இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, பா.ஜனதா வேட்பாளர்களை அறிவித்த போது, இதனை உறுதி செய்துள்ளார்.
தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியிடுகிறார் என்பதும் சிவகங்கையில் எச்.ராஜா போட்டியிடுகிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story