ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம்: பேஸ்புக், வாட்ஸ்-அப் நிறுவனங்கள் பதில் அளிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம்: பேஸ்புக், வாட்ஸ்-அப் நிறுவனங்கள் பதில் அளிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 22 March 2019 4:15 AM IST (Updated: 22 March 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ்-அப் நிறுவனங்கள் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

மதுரை, 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதி, விருதுநகரை சேர்ந்த கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அப்பாவி பெண்கள் கடுமையாக பாதிக் கப்படுகிறார்கள். சமூக விரோதிகள் சிலர், பேஸ்புக், வாட்ஸ்-அப், யூடியூப் போன்ற வலைத்தளங்களில் தவறான முகவரி மூலம் பெண்களை தொடர்புகொண்டு, அவர்களை தங்களது ஆபாச வலையில் வீழ்த்துகிறார் கள். இது சமுதாயத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டிய நேரம் இது.

பெண்கள் பாதுகாப்பு குழு

எனவே ஓய்வுபெற்ற பெண் நீதிபதி தலைமையில் ‘அனைத்து பெண்கள் பாதுகாப்பு குழு’ ஏற்படுத்த வேண்டும். பாலியல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால், அவர்களுக்கு மறுவாழ்வு, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வகையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் தவறான புகைப்படங்கள், ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களையும், இணையதளத்தில் உள்ள தவறான முகவரிகளை கண்டறிந்து நீக்கவும் புதிய மென்பொருளை கண்டுபிடித்து செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

பதில் அளிக்க உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசின் சமூகநலத்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், பேஸ்புக், வாட்ஸ்-அப் நிறுவனங்களின் தென்னிந்திய மண்டல நிர்வாகிகள் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 5-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story