சென்னையில் ‘ஹோலி பண்டிகை’ கொண்டாட்டம் வண்ணப்பொடி தூவி, நடனம் ஆடி உற்சாகம்


சென்னையில் ‘ஹோலி பண்டிகை’ கொண்டாட்டம் வண்ணப்பொடி தூவி, நடனம் ஆடி உற்சாகம்
x
தினத்தந்தி 22 March 2019 4:00 AM IST (Updated: 22 March 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ஹோலி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வடஇந்தியர்கள் வண்ணப்பொடி தூவி, நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

சென்னை,

வடஇந்தியர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக ஹோலி பண்டிகை இருக்கிறது. ‘ஹோலிகா’ என்ற வார்த்தையின் உருமாற்றமே ‘ஹோலி’ என்று குறிப்பிடுகின்றனர்.

ஹோலிகா என்னும் அரக்கி தீயில் அழிந்த புராணத்தை நினைவுகூரும் வகையிலும், கோடைகாலத்தை வரவேற்கும் வகையிலும் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதாக சிலர் கூறினாலும், பெரும்பாலானோர் சகோதரத்துவத்தை நிலைநாட்டும் வகையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.

வடமாநிலங்களில் நேற்று முன்தினமே ஹோலி பண்டிகை களைகட்டத் தொடங்கிவிட்டது. சென்னையில் வடஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நேற்று ஹோலி பண்டிகை உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

உற்சாக கொண்டாட்டம்

சென்னை சவுகார்ப்பேட்டை, வேப்பேரி, கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் பார்க்காமல் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை தூவியும், நடனம் ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இதுகுறித்து ராஜஸ்தான் யூத் அசோசியேஷன்(காஸ்மோ) முன்னாள் தலைவர் மகாவீர் போத்ரா கூறுகையில், ‘சகோதரத்துவத்தை நிலைநாட்டும் வகையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கொண்டாடப்படும், பாரம்பரியமிக்க கலாசார பண்டிகை ஆகும். இந்த நாளில் நல்ல உணவு வகைகள் சாப்பிட்டு, வண்ணப்பொடி தூவி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்வார்கள்’ என்றார்.

Next Story