தமிழகத்தில் திட்டமிட்டபடி ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு
தமிழகத்தில் தேர்தல் தேதியை மாற்ற கோரும் மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது.
சித்திரை திருவிழா
இந்த தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று பார்த்தசாரதி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், மதுரையில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளதால், தேர்தலை தள்ளிவைக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதேபோல், தமிழ்நாடு பிஷப் கவுன்சில் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், “ஏப்ரல் 18-ந்தேதி கிறிஸ்தவர்களின் பெரிய வியாழன் தினம் வருகிறது. அன்று தேவாலயங்களில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெறும். தமிழகத்தில் தேவாலயங்களின் வளாகத்தில் பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளை ஓட்டுசாவடியாக பயன்படுத்தும்போது, கிறிஸ்தவர்களின் வழிபாடு பாதிக்கும். எனவே, கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்றவும், தேர்தலை தள்ளிவைக்கவும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இதேபோன்ற கோரிக்கையுடன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.
தள்ளிவைக்க முடியாது
இந்த 3 வழக்குகளையும் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தேர்தல் கமிஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர்தல் நேரம் இரவு 8 மணி வரை அங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தேர்தலை முறையாக நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தமிழக அரசு மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அதன் பிறகுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல பெரிய வியாழன் தினம், தேர்தல் அன்று வருவதால், தேவாலயங்களுக்கு செல்லும் பக்தர்களுக்காக தேவையான வசதிகள் மேற்கொள்ளப்படும். அதனால், எக்காரணத்தை கொண்டும் நாடாளுமன்ற தேர்தலை தள்ளிவைக்க முடியாது” என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினார்கள்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
தேர்தல் கமிஷனின் அதிகாரம்
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரையில் ஏப்ரல் 18-ந்தேதி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை தேரோட்டம் நடைபெறும். எனவே, இங்கு சுதந்திரமாக தேர்தல் நடந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும், கூடுதலாக ஓட்டுப்பதிவு நேரம் வழங்கப்பட உள்ளதாகவும் தேர்தல் கமிஷன் தரப்பில் கூறப்பட்டது. தேர்தல் நடத்துவது தொடர்பாக முடிவு எடுப்பது இந்திய தேர்தல் கமிஷனின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்றும் வாதிடப்பட்டது.
இதுபோல் பெரிய வியாழன் தினத்தன்று கிறிஸ்தவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் வழிபாடு நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தேர்தல் கமிஷன் தரப்பில் கூறப்பட்டது.
தள்ளுபடி
மேலும் இந்திய தேர்தல் கமிஷனின் அதிகாரத்தில் ஐகோர்ட்டு தலையிட முடியாது. தேர்தல் கமிஷன் தரப்பில் கூறப்படும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே, நாடாளுமன்ற தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது. இந்த வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
தேர்தல் தேதியை மாற்றுமாறு உத்தரவிட முடியாது என்று ஐகோர்ட்டு கூறி விட்டதால், தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடைபெறும்.
Related Tags :
Next Story