பல கோடி ரூபாய், வெள்ளி நகைகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி


பல கோடி ரூபாய், வெள்ளி நகைகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
x
தினத்தந்தி 23 March 2019 4:15 AM IST (Updated: 23 March 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

பல கோடி ரூபாய் மற்றும் வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மதுரை, 

மதுரை யானைக்கல் பாலத்தில் பறக்கும் படையினர் நேற்று அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை மறித்து நிறுத்தினர். அந்த வேனில் இருந்தவர்கள், “தங்கள் வாகனத்தில் வங்கிக்கு சொந்தமான பணம் இருக்கிறது” என்று கூறினர். உடனே அதிகாரிகள் அதற்குரிய ஆவணத்தை தருமாறு கேட்டனர். ஆனால் உரிய ஆவணம் இல்லை. எனவே அந்த வாகனத்தை பாதுகாப்புடன் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

அங்கு மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன், அந்த வேனை பார்வையிட்டு அதில் உள்ள பணம் குறித்து மதிப்பீடு செய்ய உத்தரவிட்டார். அதன்படி அதில் இருந்த பணம் எண்ணப்பட்டது. மொத்தம் ரூ.4 கோடியே 50 லட்சம் இருந்தது.

திருச்சி தில்லை நகரில் இருந்து மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள ஒரு வங்கிக்கு பணம் எடுத்து வரப்பட்டதும், ஆனால் ஆவணங்கள் சரியாக இல்லை என்பதால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

தஞ்சை

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மையத்தில் நிரப்புவதற்காக பணம் கொண்டு வந்த வேனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பிடித்து தஞ்சை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதேபோல தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் வந்த மற்றொரு வேனையும் இந்த குழுவினர் வழிமறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது அந்த வேனிலும் பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வேனையும் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

கலெக்டர் விசாரணை

பணத்துடன் 2 வேன்கள் பிடிப்பட்டதை அறிந்த தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தஞ்சையில் உள்ள 2 தனியார் வங்கிகளில் இருந்து ரூ.1 கோடியே 29 லட்சத்தை ஒரு வேனில் எடுத்து கொண்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதற்காக தனியார் ஒப்பந்த ஊழியர்கள் கொண்டு சென்றது தெரிய வந்தது.

அதேபோல தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட ரூ.10 லட்சத்து 59 ஆயிரத்து 294-யை அவர்களது பெயரில் தனியார் வங்கிகளின் கணக்கில் வரவு வைப்பதற்காக தனியார் ஒப்பந்த ஊழியர்கள், மற்றொருவேனில் கொண்டு சென்றதும் தெரிய வந்தது. 2 வேன்களிலும் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து செல்லப்பட்டதால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சையை அடுத்த ஈச்சங்குடியில் ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக வேனில் கொண்டு சென்ற ரூ.17 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

வெள்ளி நகைகள்

திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அரியலூரை அடுத்த நாச்சியார்பேட்டை கிராமம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் ஒரு காரில் சோதனையிட்டதில், அதில் உரிய ஆவணங்களின்றி வெள்ளி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் மதிப்பு ரூ.68 லட்சம் இருக்கும் என தெரிவித்தனர். பின்னர் அந்த வெள்ளி நகைகள் அரியலூர் மாவட்ட கருவூலத்தில்ஒப்படைக்கப்பட்டது.

மதுபாட்டில்கள்

நாகர்கோவில் தொகுதி தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் தேரேகால்புதூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ஆம்னி பஸ் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு பயணி வைத்திருந்த பையில் விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானம் பாட்டில், பாட்டிலாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 17 மதுபாட்டில்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும்.

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.4½ லட்சம் சிக்கியது.

Next Story